சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்ரவி, தற்போதும் ஆளுநராக நீடிக்கிறாரா?, அவர் எந்த அடிப்படையில் நீடிக்கிறார் என மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் உரிமை அறியும் சட்டமான ஆர்டிஐ சட்டத்தின் மூலம் ஆளுநர் மாளிகைக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ஏற்கஎனவே  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக நியமிப்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும், அவரை மீண்டும் நியமித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்றும் கூறியிருந்த நிலையில், தற்போது ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜுலை 31ந்தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இருந்தாலும் அவர் தொடர்ந்து ஆளுநராக பணியாற்றி வருகிறார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில்,  ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பின்பு எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிக்கிறார் என மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் அலுவலகத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 2021 செப்டம்பர் 18 அன்று தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு, 2024 ஜூலை 31 அன்று அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் முடிவடைந்ததுள்ளது. தமிழ்நாடு ஆளுநரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை பதவியில் தொடர குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்காத நிலையில், பதவிக்காலம் முடிவடைந்த காலத்திற்கு பிறகு நீங்கள் எந்த தகுதியின் கீழ் ஆளுநர் பதவியில் தொடர்கிறீர்கள்? பதவிக்காலம் முடிந்த பிறகும் நீங்கள் ஆளுநர் பதவியில் நீடிப்பது சட்டவிரோதம் இல்லையா? என்று  கேள்விகளை எழுப்பியுள்ளார்.