சென்னை:
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு (எம்.சி.ஐ) அதற்க பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, மத்திய அரசை எதிர்த்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த புறநோயாளிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.
மருத்துவ கல்வி தொடர்பான முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இது மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் மருத்துவ, சுகாதார பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த புதிய மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவ ஆணையம் அமைக்கும் புதிய மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் மருத்துவமனைகளில் அவசர அறுவை சிகிச்சை மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை தவிர மற்ற நோயாளிகளுக்கு இன்று சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவசர சிகிச்சை பெறுவதற்கு மட்டுமே நோயாளிகள்
அதுபோல அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒரு மணி நேரம் புற நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து விட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனை, மகப்பேறு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஒருமணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நீரிழிவு, சிறுநீரகம், ரத்த கொதிப்பு, இருதயம், நரம்பியல் உள்ளிட்ட துறை சார்ந்தவர்களும், காய்ச்சல், தலைவலி, கைகால் வலிக்கு சிகிச்சை பெற வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால் தமிழகம் முழுவதும் நோயாளிகள் கடும் அவஸ்தைக்கு ஆளாகி உள்ளார்கள்.