சென்னை:
சிறுமியின் வயிற்றை அடைத்திருந்த தலை முடியை சென்னை டாக்டர்கள் அகற்றினர்.
13 வயது சிறுமி ஒருவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவு சரியாக உட்கொள்ளவில்லை, உடல் திடீரென மெலிந்தது போன்ற காரணங்களால் மனநிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு டாக்டர்கள் எண்டாஸ்கோபி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வயிற்றின் இரைப்பையில் தலை முடி அதிகளவில் சுருண்டு சிக்கியிருந்தது தெரியவந்தது. 300 மில்லி லிட்டர் கொள்ளவு கொண்ட இரைப்பையில் 250 மில்லி லிட்டர் அளவுக்கு முடி இருந்தது. மீதமுள்ள 50 மில்லி லிட்டர் அளவுக்கு மட்டுமே தண்ணீர் மற்றும் உணவு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். இது குறித்து அந்த மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், மனநிலை சரியில்லாத அந்த சிறுமி பல வருடங்களாக தனது தலை முடியை பிய்த்து சாப்பிட்டு வந்துள்ளார். இதை அவர்களது பெற்றோரும் கவனிக்கவில்லை. சிறுமி நன்கு குணமடைந்து வருகிறார். விரைவில் வீடு திரும்புவார் என்றார்.
மேலும் சமீபத்தில் பஞ்சாப்பில் 15 வயது சிறுமி ஒருவர் வயிற்றில் இருந்து 1 கிலோ எடையில் தலைமுடியை டாக்டர்கள் அகற்றியுள்ளனர். மனநிலை பாதித்த பெண்களின் கூந்தலை சிறியதாக அவ்வப்போது வெட்டி விட்டால் இது போன்ற சம்பவங்களை தவிர்க்கலாம் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.