கன்னியாகுமரி:
ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து அலோபதி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அளித்த அனுமதியை அரசு வாபஸ் பெற வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக ஏற்கனவே இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். முதற்கட்டமாக அவர்கள் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதற்கும் அரசு செவிசாய்க்காத நிலையில் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உயிர்காக்கும் சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகள் அளிப்பதில்லை என்று முடிவு செய்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளது. இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 1500 மருத்துவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.