மும்பையில் பெய்யும் மழையையும் இனி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகமாக உள்ளது.
இந்திய தேசிய கமாடிட்டி மற்றும் டெரிவேட்டிவ்ஸ் எக்சேஞ்ச் (NCDEX) சார்பில், நாட்டின் முதல் வானிலை அடிப்படையிலான ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தம் ஜூன் 1 முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. மும்பையில் பெய்யும் மழையின் அளவு குறைவு அல்லது அதிகரிப்பு காரணமாக ஏற்படும் நிதி பாதிப்புகளை சமாளிக்க இந்த திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிடும் மழை அளவு புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும். விவசாயம், கட்டுமானம், மின்சாரம், லாஜிஸ்டிக்ஸ், வங்கி உள்ளிட்ட துறைகள் மழையால் ஏற்படும் பாதிப்புகளை கணக்கிட்டு முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என NCDEX தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிதி தலைநகரமான மும்பையில், ஜூன் முதல் தொடங்கும் பருவமழை காலத்தில் கனமழையால் போக்குவரத்து, சரக்கு விநியோகம் மற்றும் கட்டுமான பணிகள் அடிக்கடி பாதிக்கப்படுவது வழக்கம்.
இதற்கிடையில், இந்தாண்டு இந்தியாவில் பருவமழை சராசரியை விட குறைவாக இருக்கும் என கடந்த மாதம் கணிக்கப்பட்டது. இதனால் விவசாய உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் விளம்பரம் வெளியிட்டுள்ள NCDEX, “மழையும் ஒரு சந்தை சிக்னல்” என குறிப்பிட்டு, இந்த திட்டத்திற்கு “TradeRain” என பெயரிட்டுள்ளது.
அந்த விளம்பரத்தில், கனமழையில் மக்கள் அவதிப்படும் காட்சிகளுடன், வர்த்தக வரைபடங்களை பார்த்து மகிழ்ச்சியுடன் இருக்கும் பெண் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். “சிலருக்கு இது வெறும் மழை… சிலருக்கு இது ஒரு வாய்ப்பு” எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]