நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி என நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கி, மோசடி செய்து தப்பியோடிவர்களின் பட்டியல் நீண்டு வருகிறது. ஆனால் இவர்களைவிட அதிகமாக வங்கிகளில் மோசடி செய்துவிட்டு, பிரதமருடனே சுற்றுகிறார் ஒருவர் என்று புகார் கிளம்பியிருக்கிறது.
அவர் – அதானி. கடந்த 2016ம் வருடம், மார்ச் மாதம் மாநிலங்களவைக் கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பவன் வெர்மா முக்கியமான ஒரு உரையை நிகழ்த்தினார். அப்போது அவர், அதானி குழுமம் மற்றும் அதன் நிறுவனர் கவுதம் அதானியின் மீது வங்கிகளில் பெற்ற வாராக்கடனைத் திரும்பச் செலுத்தாத குற்றச்சாட்டுகளை சரமாரியாக தொடுத்தார்.
பொதுத்துறை வங்கிகளில் அவர் திரும்பச் செலுத்தாத இமாலயத் தொகையை பட்டியலிட்டார். ‘தேசிய வங்கிகளில் கடன் வாங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் திருப்பி செலுத்தவேண்டிய கடன்தொகை மட்டும் ரூ.5 லட்சம் கோடி ஆகும். அதில் ஏறக்குறைய ரூ.1.4 லட்சம் கோடியை ஐந்து நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தவில்லை.
அவை, ஜி.வி.கே., சுஜ்லான் எனர்ஜி, இந்துஸ்தான் கட்டுமான கம்பெனி மற்றும் அதானி குழுமம் ஆகியன. அரசுக்கும் இந்த நிறுவனங்களுக்கு இடையே என்ன உறவு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அதானி மாதிரியான பெருமுதலாளிகள் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கண்டுகொள்வதில்லை.
பிரதமர் மோடியும் தான் எங்கு சென்றாலும், கூடவே அதானியை அழைத்துச் செல்கிறார்’ என்று குற்றம்சாட்டினார் பவன் வெர்மா. இந்த உரை நிகழ்த்தப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. மேற்குறிப்பிட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. “லண்டனுக்கு தப்பியோடிய விஜய் மல்லையாவை விட பல மடங்கு அதிகமாக கடன்வாங்கிவிட்டு, திரும்பச் செலுத்தாத அதானி, பிரதமருடன் சுற்றுகிறாரே” என்று வியக்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.