சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன், தமிழகத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி தனியாக இருக்கும் வீடுகளில் புகுந்து கொலை, கொலை கொள்ளையில் ஈடுபட்ட மர்மக்கும்பல் மாநிலத்தையே நடுநடுங்க வைத்தது. யார் இந்த கொடூரங்களை செய்தது என்பதையே கண்டுபிடிக்க முடியாமல் திணறியது தமிழக காவல்துறை.
இந்த நிலையில் கொள்ளையரை கண்டுபிடிக்க 2005ம் ஆண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. அப்படை, மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியா முழுதும் தேடி, உ.பி.யைச் சேர்ந்த ‘பவாரியா’ என்ற கொள்ளைக் கும்பலை பிடித்து சிறையில் அடைத்தது.
இந்த நிஜ சாகசம்தான், “தீரன் அத்தியாயம் ஒன்று” படமாக உருவாகியிருக்கிறது.
இந்த பாவாரியா கொள்ளைக் கும்பல் போலவே தமிழகத்திலும் ஒரு கும்பல் உண்டு. அதுவும் தமிழகத்தின் நடுநாயகமாக விளங்கும் திருச்சிக்கு அருகேதான் இந்தக் கும்பல் வசிக்கிறது. ஆம்.. திருச்சிக்கு அருகே உள்ள ராம்ஜிநகர்தான் அந்த கொள்ளையர் வசிக்கும் பகுதி.
தீரன் படத்தில் காட்டப்பட்ட பாவாரியா கொள்ளைக்கும்பல் போல இவர்கள் அத்தனை கொடூரமானவர்கள் இல்லை. “கத்தியின்றி ரத்தமின்றி” தங்கள் கைவரிசையைக் காண்பித்துவிடுவார்கள். ஆம், நாம் கண்மூடி கண் திறப்பதற்குள் பல பவுன் நகை, பொருட்கள், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுவிடுவார்கள்.
பவாரியாஸ் போல இவர்கள், கேப்மாரிஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆந்திராவிலிருந்து வந்து திருச்சி ராம்ஜி நகரில் செட்டில் ஆனவர்கள்.
இவர்கள் தங்களை, இனத்தான் என தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். திருடுவது கொள்ளையடிப்பதுதான் இவர்களது குலத்தொழில். ஆனால் ஆகப்பெரும்பாலும் காவல்துறையில் சிக்கிக்கொள்ளாத பலே கில்லாடிகள்.
ஒருவேளை சிக்கிக் கொண்டாலும் போலி நபர்களுக்கு பணம் கொடுத்து சிறைக்கு அனுப்பி விடுவார்கள்.அதையும் மீறி சிக்கிக் கொண்டால் பிணையில் வெளிவந்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவு ஆகிவிடுவது இவர்களது ஸ்டைல்.
வல்லடை
இவர்கள் கொள்ளையடிக்கச் செல்வதை “வல்லடைக்குப் போகிறோம்” என்று சொல்வார்கள். இவர்கள் கொள்ளையடிக்கும் முறையே மிக வித்தியாசமானது. ஒரு குழுவாகச் கிளம்பிச் சென்று பணப் புழக்கம் அதிகமுள்ள வங்கி, நகைக்கடை, அடகுக் கடை, ஏ.டி.எம் சென்டர் போன்ற இடத்தை நோட்டமிடுவார்கள். தங்களுக்கு தோதான இடம் என்று தீர்மானித்தபிறகு அந்த இடைத்தைச் சுற்றி பிரிந்து நிற்பார்கள்.
அதிகமாக பணம் அல்லது நகை எடுத்து வருபவரை, அடையாளம் கண்டு குழுவிலுள்ள மற்றவர்களுக்கு சைகை அல்லது கண் ஜாடை மூலம் சிக்னல் கொடுத்துவிடுவார். இன்னொரு நபர் பணம் வைத்துள்ள நபர் அருகே சென்று சில ரூபாய் நோட்டுக்களை கீழே போடுவார். பிறகு, “கீழே பணம் கிடக்கிறதே.. உங்களுடையதா..” என்பார். கீழேகிடக்கும் சில ரூபாய் நோட்டுக்களை அந்த அப்பாவி எடுக்க முனையும்போது, அவரிடம் இருக்கும் பையை இன்னொருவர் எடுத்துக்கொண்டு ஓடி எஸ்கேப் ஆகிவிடுவார்.
ஓடிச்செல்லும் நபர், பணப்பை நீண்ட நேரம் தன்னிடம் வைத்திருக்கமாட்டார். உடனடியாக தனது குழுவில் உள்ள வேறு நபரிடம் கைமாற்றிவிடுவார். இப்படி கைமாறி கைமாறி அந்த பணப்பை திருச்சி ராம்ஜி நகருக்கு வந்துவிடும்.
இவர்களது இன்னொரு டெக்னிக்கும் வித்தியாசமானது. பிஸ்கட்டை மென்று துப்பி ‘ஆடையில் மலம் ஒட்டியிருக்குங்க’ எனச் சொல்வார்கள். சம்பந்தப்பட்டவரின் கவனம் அந்த “மலத்தை” சுத்தம் செய்ய திரும்பும்போது, அவரிடமிருந்து பையை பிடுங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்வதுபோல் பணம் வைத்துள்ளவர் மீது மோதுவார்கள்.. அப்படியே பணப்பையை லவட்டிவிடுவார்கள்.
இவர்களது பூர்வீகம் ஆந்திரா என்பதால் தெலுங்கு கலந்த தமிழ் பேசுவார்கள்.
இவர்களது கொள்ளை திட்டங்களை காவல்துறைக்கு சொல்வதற்கென்றே உளவாளிகள் சிலரும் உண்டு. இந்த உளவாளிகளுக்கு வேண்டியதைக் கொடுத்தால், அவர்கள் எப்போது எங்கே கொள்ளை நடக்கப்போகிறது என்பதைச் சொல்லிவிடுவார்கள்.
சமீபத்தில் சென்னை தி.நகரில் 4.5 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்தது. குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்தது. விசாரணையில் ராம்ஜிநகர் கொள்ளையர்கள்தான் இதில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்தது.
கொள்ளையடித்து ராம்ஜி நகர் சென்று பதுங்கிவிட்டனர். இதையடுத்து ஒரு காவல் துறை உதவி ஆணையர், மூன்று காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப்படை கொள்ளையர்கள் பற்றி தகவல் சொல்லும் உளவாளிகளுக்கு வேண்டியதைக் கொடுக்க… ராம்ஜி நகர் கொள்ளையர்களில் இந்தந்த நபர்கள்தான் கொள்ளையடித்தனர் என்று சொல்லிவிட்டார்கள்.
இதையடுத்து ராம்ஜி நகர் சென்றது தனிப்படை. ஆனால் அங்குள்ளவர்கள், கொள்ளையர்களை ஒப்படைக்க முடியாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக தெரிவித்துவிட்டனர். “வேண்டுமானால், அந்த சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் மீதி இருக்கிறது. அதைத் தருகிறோம்” என்றனர்.
ஆனால் தனிப்படை போலீசார், குற்றவாளிகளைக் கைது செய்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க, போனால் போகிறது என்று (!) ஒரு நபரை மட்டும் அழைத்துச் செல்ல சம்மதித்தனர். அதோடு கொள்ளையடித்த நாலரை கிலோ தங்கத்தில் செலவு (!) செய்தது போக 3.8 கிலோ தங்கத்தைத் திருப்பிக்கொடுத்தனர்.
அந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஆறு கொள்ளையர்களும் இன்னமும் காவல் துறையினரிடம் சிக்கவில்லை. வெளி மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள் அவர்கள்..
இந்தக் கொள்ளையர்களுக்கும் காவல்துறையினருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
இவர்களிடைய வித்தியாசமான “தாலி கட்டுதல்” ஒன்று உண்டு. இந்த இரண்டு விசயங்களை குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்…
– டி.வி.எஸ். சோமு