சென்னை: தமிழக முதல்வராக நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். அவருடன் திமுக அமைச்சரவையும் பதவி ஏற்க உள்ளது. இதைத்தொடர்ந்து, ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, தமிழக மக்களுக்கு மத்தாப்பு போன்று ஜொலி ஜொலிக்கும் வகையில் முத்தான கையெழுத்தை போட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
முதல் கையெழுத்தாக ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும் முத்தான திட்டத்துக்கு முதல் உத்தரவு போடுகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி, ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.4,000 கிடைக்கும் என்று கோவையில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தபடி, சாமானிய பெண்களின் வசதிக்காக,
2வது கையெழுத்தாக, தமிழகம் முழுவதும் டவுன் பஸ்களில் (நகர பேருந்து) பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அதற்கான கோப்பில் கையெழுத்திடுவார் எனவும் தெரிகிறது.
3வது கையெழுத்தாக, இளம்பெண்களின் திருமண உதவித்தொகை ரூ.30 ஆயிரமாக உயர்த்துவதுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது.
பெண்களின் திருமண உதவித்திட்டமான, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை உயர்த்தப்படுவது தொடர்பான கோப்பில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது.
மேலும் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் உள்பட நாளை பதவி ஏற்கும் 34 பேர் கொண்ட திமுக அமைச்சரவை பட்டியல் – முழு விவரம்!