சென்னை
திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இடையே தேர்தல் பிரசாரத்தில் பொதுவாகக் காணப்படும் புகைப்படம் குறித்து இங்கு பார்ப்போம்
வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பல முனை போட்டி உள்ளது. ஆயினும் முக்கிய அணிகளான திமுக மற்றும் அதிமுக அணிகள் இடையேதான் போட்டிகள் உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இரு கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பொதுக் கூட்டங்கள், ஊடக விளம்பரங்கள் என விதம் விதமாக பிரசாரம் நடந்து வருகின்றன.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடந்த மார்ச் 7 ஆம் தேதி அன்று திமுக தேர்தல் அறிக்கையைத் திருச்சியில் வெளியிட்டார். உடனடியாக அதற்காக திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒரு டிஜிடல் போஸ்டரை வெளியிட்டது. அந்த போஸ்டரில் ”வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ் நாடு” என்னும் வாசகங்கள் இருந்தன. அதில் ஒரு பெண் சேலை அணிந்து புன்சிரிப்புடன் இருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட டிஜிடல் போஸ்டர்களிலும் அதே பெண் இடம் பெற்றிருந்தார் அதிமுகவினரின் தகவல் தொழில்நுட்ப பிரிவால் முக நூல் பக்கங்களில் வெளியான இந்த டிஜிடல் போஸ்டரில் இதே பெண்ணின் சேலை அணிந்த புகைப்படம் அதிமுகவினரின் சாதனைகள் குறித்த வாசகங்களுடன் இடம் பெற்றிருந்தது.
இது குறித்து திமுகவினர் தங்கள் தேர்தல் அறிக்கையைக் காப்பி அடித்த அதிமுகவினர் தற்போது எங்கள் விளம்பரப் பெண்ணின் புகைப்படத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த புகைப்படத்துக்கு நாங்கள் காப்புரிமை பெற்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு அதிமுக மதுரை மண்டல செயலர் ராஜ் சத்யன், “இந்த பெண்ணின் புகைப்படத்தை ஏற்கனவே நாங்கள் மாநில அரசு விளம்பரங்களில் பயன்படுத்தி உள்ளோம். எனவே இந்த புகைப்படத்தைக் காப்பி அடித்துள்ள திமுக அதற்கு உரிமை கொண்டாட முடியாது. என தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன், “இது போல் இணையப் புகைப்படங்களை யாரும் பயன்படுத்தலாம், புகைப்படங்களை வாங்குவதில் இரு முறை உள்ளது. ஒன்று தனிப்பட்ட முறை மற்றது பொதுவானவை, பொதுவானவை பிரிவில் உள்ள புகைப்படங்களைச் சிறிது கட்டணம் செலுத்தியோ அல்லது இலவசமாகவோ பயன்படுத்தலாம். ஆனால் தனிப்பட்ட பிரிவில் உள்ளவற்றைப் பயன்படுத்த முடியாது” எனக் கூறி உள்ளார்.
கடந்த 2016 ஆம் வருடம் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஒரே மூதாட்டியின் படம் மற்றும் வீடியோவை பயன்படுத்தி பிரசாரம் செய்தது நினைவிருக்கலாம். தற்போதும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.