2017-18 நிதியாண்டில் அதிகளவில் தனிப்பட்ட கடன்கள் வாங்குவதில் தமிழ்நாட்டு மக்கள் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பர்சனல் லோன் வாங்குவதில் தென்னிந்திய மாநிலங்கள் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: 2017-18 நிதியாண்டில் தென்னிந்திய மாநிலங்களில் வாங்கப்பட்ட தனிப்பட்ட கடன் மதிப்பு ரூ.5.7 லட்சம் கோடியாகும். வட மாநிலங்களில் ரூ.2.5 லட்சம் கோடியும், மேற்கு மாநிலங்களில் ரூ.3.9 லட்சம் கோடியும் வங்கிகளில் தனிப்பட்ட கடன்களாக அளிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18ஆம் நிதியாண்டில் தென்னிந்தியாவின் தனிப்பட்ட கடன் மதிப்பு 37 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வட மாநிலங்களின் தனிப்பட்ட கடன் மதிப்பு 21 சதவிகிதமும் மேற்கு மாநிலங்களின் கடன் 14 சதவிகிதமும் உயர்வைக் கண்டுள்ளது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் அதிகமாகக் கடன் வாங்கிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. இம்மாநிலத்தில் 2017-18 நிதியாண்டில் ரூ.1.6 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ரூ.1.5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கேரளா ரூ.91,000 கோடியும், தெலங்கானா ரூ.90,200 கோடியும், ஆந்திரா ரூ.72,100 கோடியும் கடன் வாங்கியுள்ளன.
தனியார் கடன் நிறுவனங்களின், குறிப்பாக மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களின் ஊடுருவல் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது.
அதே போல வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதில் மேற்கு மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. இங்கு கடந்த நிதியாண்டில் 28 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் தென்னிந்தியர்கள் மற்றும் வட இந்தியர்கள் தலா ரூ 25 லட்சம் கோடி பணத்தை டெபாசிட் செய்துள்ளனர்.