சிவகாசி :

சிவகாசி தொகுதிக்கு உட்பட்ட மாற்று திறனாளிகள், ஆதரவற்றோர், குடும்ப அட்டை இல்லாதவர்கள், வெளிமாநிலத்தவர்கள் என்று ஆயிரம் பேருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல மாற்று திறனாளிகள் நடக்கமுடியாமல் தவழ்ந்து வந்து உதவி பொருள் வாங்கிய சம்பவம், அங்கிருந்தோரையும், இதை ஊடகங்களில் பார்த்த  பலரையும் வேதனைக்குள்ளாக்கியது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், தனிநபர்கள் என்று பலரும் வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவுவதாக எண்ணி ஊரடங்கு உத்தரவு விதியையும் மீறி கூட்டத்தை கூட்டி வருகின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் மக்களை வெளியே வரச்சொல்லி ரேசன் கடைகளில் 1000 ரூபாய் வழங்கும் அரசின் முடிவு கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், அதனை கைவிட்டு வீடுகளுக்கு சென்று வழங்க உத்தரவிட்டிருக்கும் நேரத்தில்…

மாற்று திறனாளிகளுக்கு அவர்கள் இல்லம் தேடி உதவி செய்ய நினைக்காமல், ஏற்கனவே பல்வேறு உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சந்தித்து, வருபவர்களை, நிவாரண உதவிகளுக்காக, இதுபோன்று பொதுஇடங்களுக்கு வரவழைப்பதும், அவர்கள் தங்களின்  உயிரையும் பணயம் வைத்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தி ஸ்பைனல் பவுண்டேசன் (The Spinal Foundation) நிர்வாகி ஒருவர், முதுகு தண்டுவட பாதிப்பிற்கு உள்ளான நபர்கள் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் தன்னார்வலர்கள் முடிந்த வரை இதுபோன்ற நேரங்களில் அவர்கள் வீடுகளுக்கு சென்று வழங்கலாம்.

தமிழக அரசு தங்களை போன்ற மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்திருந்தபோதும், இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு வழங்கும் உதவிகள் அவர்கள் வீடுகளுக்கு நேரடியாக வழங்கினாலும், ஊரடங்கு நேரத்தில் புடைசூழ சென்று பலரும் அறிந்துகொள்ள படம் பிடித்து போடும் நபர்களுக்கு தமிழக அரசு உரிய அறிவுறுத்தலை இனியாவது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

அரசுகள், அதிகாரிகள், அரசியல் கட்சிகள் கவனிப்பார்களா…?