கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளில் மாணாக்கர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் பல நாடுகளில் கல்விமுறை டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி அடியோடு பாதிக்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
பள்ளிகள் திறக்க வேண்டிய ஜூன் மாதம் கடந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு வருவதால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், டிஜிட்டல் மயத்து மாறி வருகின்றன. தனியார் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணாக்கர்களின் வீடுகளில்  இணையவசதியுடனான மொபைல் போன்கள் அல்லது லேப்டாப், டெஸ்க்டாப்  போன்றவை இருப்பதால், அவர்கள் ஆன்லைன் மூலம் மாணாக்கர்களுக்கு கல்வி போதிக்கத் தொடங்கி விட்டனர்.
ஆனால், அரசு பள்ளி மாணாக்கர்களின் நிலைமையே கேள்விக்குறியாகவே உள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில்  அடித்தட்டு மக்களும், ஏழைமக்களும் மட்டுமே  கல்வி பயின்று வருவதால்,  அவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி போதிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. 90 சதவிகித அரசு பள்ளி மாணவர்களிடம் இணையவசதி கொண்ட ஸ்மார்ட் போன் இல்லை என்பதும் பெரும் குறையாக உள்ளது.

இதுபோன்ற சூழலில் தெலுங்கானா மாநிலத்தில், தனியார் பள்ளிகள் மூலம் நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து, அங்குள்ள  தெலுங்கானா மாநில ஐக்கிய ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.  மாநிலம் முழுவதும் பெற்றோர்கள், அரசு பள்ளி மற்றும் தனியால் பள்ளி மாணவர்களிடம்  ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அவர்களின் கருத்துக்கள் என்ன என்பது குறித்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
இந்த ஆய்வானது  தெலுங்கானா மாநிலத்தில் 33 மாவட்டங்களில் 489 மண்டலங்களில், 1,729 ஆசிரியர்களால் கணக்கெடுக்கப்பட்டதாகவும், ஆய்வில்  22,502 பெற்றோர்கள், 30,458 அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 39,659 மாணவர்கள் மற்றும் 1,868 கிராமங்கள் / வார்டுகளில் 9,201 தனியார் பள்ளி மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
70 சதவிகித மாணாக்கர்கள் பள்ளிகளுக்கு சென்று கல்வி கற்பதையே விரும்புகின்றனர்.
90 சதவிகித வீடுகளில் இண்டர்நெட் வசதி இல்லை.
அதன்படி,  ஆன்லைன் வகுப்புகளால் எந்த  பயனும்  இல்லை என 70.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகளால்  ஓரளவு  பயன் கிடைத்திருப்பதாக  24.7 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.
48.9 சதவீத வீடுகளில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே உள்ளது.

39.6 சதவீத வீடுகளில்  ஆன்லைன் கல்வி கற்க தேவையான ஸ்மார்ட் போனோ, கப்யூட்டரோ,  இணையவசதியோ இல்லை
அதே வேளையில் ஸ்மார்ட்போன்கள் உள்ளவர்களில், 58.7 சதவீதம் பேருக்கு இணையவசதி இல்லை.
30.3 சதவீதம் பேரிடம்   மட்டுமே தங்களிடம் இணையவசதி உள்ளது.
70  சதவீதம் பெற்றோர்கள்,  மாணவர்கள், பள்ளிகளில் வகுப்பறைகளில் படிப்பதே சிறந்தது.
இவ்வாறு ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளால்,  ஆன்லைன் வகுப்பால் எந்தவித பயனும் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும், இந்த கல்வி முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுவது டன்,  அவர்களிடையே சோம்பேறித்தனத்தை மேலும் அதிகரிக்கவே செய்கிறது. மாணாக்கர் களுக்கு  கல்வி மேல் இருக்கக் கூடிய ஆர்வம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் வகுப்புகளால் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும்,  தேவையான பாதுகாப்பு  நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்பது  பெரும்பாலானா  பெற்றோர்கள்  கருத்து தெரிவித்து இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.