சென்னை:

ல்லூரிகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல் கருத்துகள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அரசியல் கருத்து பேசும் விழாக்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து  கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவிக்கை அனுப்பட்டுள்ளது.  கல்லூரி கல்வி இயக்குனர் முனைவர் ஜெ. மஞ்சுளா இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

அதில்,  ”சமீப காலமாக கல்லூரி விழா, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சி சார்ந்த, இயக்கம் சார்ந்த கொள்கைகளை பேசுவதாக தெரிய வந்துள்ளது. மாணவர்களிடம் இப்படி பேசுவது அவர்களின் படிப்பை, ஆராய்ச்சியை பாதிக்கும். இது அவர்களின் கல்லூரிக்கு இடையூறாக அமையும்” என்று கூறப்பட்டு இருக்கிறது.

கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவோர், அரசியல் கட்சிகளின் கொள்கை மற்றும் கருத்துகளை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும் என்றும், அவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்றும்  கூறி உள்ளது.

எல்லா கல்லூரிகளும் உடனடியாக இதை பின்பற்ற வேண்டும் என்றும், முக்கியமாக அரசு உதவி பெறும்/ சுயஉதவி கல்லூரிகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்று கூறியுள்ளார்.

இது தமிழக அரசியல் கட்சியினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.கடந்த மாதம் 25ந்தேதியிட்டு இந்த அறிவிப்பு அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பட்டு உள்ளது.

சமீபத்தில் நடிகர் கமலஹாசன் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு மாணவர்களிடம் தனது கட்சிக்கு வர அழைப்பு விடுத்திருந்த நிலையில், தமிழக கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.