சென்னை,
தமிழகத்தில் இனிமேல் புயலுக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் இனி புயலுக்கு வாய்ப்பில்லை, ஆகவே பொதுமக்கள் வலைதளங்கள் வாயிலாக பீதியை ஏற்படுத்தி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா வேண்டு கோள் விடுத்துள்ளார்.
கடந்த வாரம் சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களை உலுக்கி எடுத்த வர்தா புயலை தொடர்ந்து மற்றொரு புயல் உருவாகிறது என்று வதந்திகள் பரவி மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது.
கடந்த வருடம் ஏற்பட்டது போன்று பேரழிவு ஏற்படும் என்றும் மக்களை பயமுறுத்தி வலைதளங்களில் வதந்திகள் உலா வருகின்றன.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் கூறியதாவது
இலங்கைக்கு தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும்,
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாவும் அவர் கூறினார்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் தலைஞாயிறில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் இனி புயலுக்கு வாய்ப்பில்லை, ஆகவே பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.