சென்னை,
ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி டிசம்பர் 31ந்தேதி நள்ளிரவில் இந்து கோவில்களை திறக்க தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் கோவில்களை திறந்து வைக்கக் கூடாது, இது ஆகம விதிமீறல் என்றும், கோவில்களை திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவில்களை திறக்க தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்துக்களின் ஆகம விதிப்படி இரவு 9 மணிக்குள் ஆலயத்தில் பூஜையை முடித்து நடையைச் சாத்த வேண்டும். பின்னர் காலை நாலரை மணி முதல் 6 மணிக்குள் நடையைத் திறக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆகம முறைப்படி, இரவு சயன அறை பூஜை முடிந்த பின்னர் நடை சாத்தப் படவேண்டும் என்பது ஆலய நடைமுறை என்றும், அத்துடன் கோவில்களை இரவில் திறந்து வைக்கக் கூடாது என ஆந்திர மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவையும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சிவாலயங்களில் சிவ ராத்திரி அன்று மட்டுமே, ஆலயம் திறந்து வைக்க வேண்டும் என்றும், வைணவக் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி நாளிலும் மட்டுமே இரவு திறந்து வைக்க வேண்டும் என்றும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
ஆனால், இந்த ஆகம விதிகளை மீறி புத்தாண்டை முன்னிட்டு கோவில்களை நள்ளிரவில் திறந்து வைக்கப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நாளை விடுமுறைக் கால அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.