சென்னை:

நாடு முழுவதும் வெங்காயம் விலை இல்லத்தரசிகளின் கண்களில், கண்ணீரை வரவழைக்கும் வகையில் உயரத்துக்கு பறந்து செல்லும் நிலையில்,  வியாபாரிகள், 50டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருந்தால் நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக, வெங்காயப் பயிர்கள் அழுகி நாசமான நிலையில், வெங்காயத் தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவி வருகிறது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகஅரசும் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஒரு மாதங்களுக்கும் மேல், வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் பெரிய வெங்காயம் கிலோ ரூ.60 முதல் விற்பனை  செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை ரூ.80ஐ எட்டி உள்ளது. அதுபோல சாம்பார் வெங்காயம் ரூ.100 ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது.

இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது. உயர்ந்து வரும் வெங்காயம் மீதான விலைகை கேட்டு இல்லத்தரசிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வெங்காயம் பதுக்கப்படுவதை தவிர்க்க, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி,  தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது ,   வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அறிவித்து உள்ளார்.