இந்து மதத்தை தவறாக விமர்சிப்பவர்களை கொலை செய்ய தயங்கக்கூடாது என்று பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்பாடலாசிரியர் வைரமுத்து ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை தவறாக விமர்சித்ததாகக்கூறி அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர் இந்துத்துவாதிகள். வைரமுத்து மீது வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த நிலையில் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் சில இடங்களில் இந்துத்துவவாதிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக, இந்துமுன்னணி, வி.எச்.பி. ஆகியவை இணைந்து போராட்டம் நடத்தின. இதில் கலந்துகொண்ட தமிழக பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், “ இந்துக்களை யார் தவறாக பேசினாலும் அவர்களை கொலை செய்ய தயங்கக்கூடாது” என்று பேசி அதிரவைத்தார்.
கூட்டம் முடிந்தபிறகு இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “அப்படி நான் பேசினால் வழக்கு பதிவார்கள் அல்லவா.. அது போல வைரமுத்து பேசியதற்கும் வழக்கு பதியவேண்டும் என்ற அர்த்தத்தில் பேசினேன்” என்று சமாளித்தார். இப்படி தலை எடுக்கும் பேச்சு வட மாநிலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகத்திலும் இப்படி வன்முறை பேச்சுக்கள் ஆரம்பித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மேலும் அவர், “வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் பத்து கோடி ரூபாய் பரிசளிப்பதாகவும் பேசியது குறிப்பிடத்தக்கது.