நாகை: மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் கடலோர மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறி உள்ளது. இது மேலும் வலுவடைந்து டெல்டா கரையை நோக்கி நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு காரணாக, வங்கக் கடல் பகுதியில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிமீ வரை வீசக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என நாகை மாவட்ட மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் மற்றும் டீசல் ஆகியவை நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் பட்டினச்சேரி துவங்கி கோடியக்கரை வரை உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3500-க்கும் நாட்டு படகுகள் கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் அந்தந்த படகு நிறுத்தும் தளத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதுபோல, ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது. பாம்பன் கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக உயரத்திற்கு அலைகள் எழுந்து கரையில் மோதின. இதனால் ராநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக உயரத்திற்கு அலைகள் எழுந்து கரையில் மோதின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது
. அதன்படி இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீனவர்கள் முன்கூட்டியே எடுத்துள்ளனர்.
மீன்பிடிக்க ஏற்பட்டுள்ள தடையால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.