சென்னை:  கூட்டணி குறித்த கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது  என திமுக நிர்வாகிகளுக்கு  திமுக தலைமை தடை விதித்துள்ளது.

கூட்டணி, தொகுதிப்பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சியினர் தொடர்பான கருத்துகளை கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என திமுக அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அண்மைக் காலமாக திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கருத்து முரண் பேசுபொருளாகி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் சிலர் தங்கள் கருத்துகளை திமுகவை விமர்சிக்கும் வகையில் முன்வைத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி பேசும்போது, “காங்கிஸில் சிலர் இருக்கிறார்கள். அவர்களது பெயரைச் சொன்னாலும் தப்பில்லை. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோரைத்தான் சொல்கிறேன்.

அவர்கள் எம்பி ஆகிவிட்டார்கள். அதனால் அவர்கள், இந்தத் தேர்தலில் எவன் எம்எல்ஏ ஆனா என்ன, ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள். அவர்கள் இப்போது, அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இதை எல்லாம் தலைமை புரிந்து அடுத்த முறை அவர்களுக்கு சீட்டே கொடுக்க விடக் கூடாது. அதற்கு நம்மால் ஆன காரியங்களைச் செய்ய வேண்டும். நான் எதற்காகச் சொல்கிறேன் என்றால், நாம் உணர்வோடு இண்டியா கூட்டணியில் இருக்கிறோம்.

இண்டியா கூட்டணியைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறோம். நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. டெல்லியில் இக்கூட்டணி பேசப்படுகிறது என்றால், அதற்கு முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகிய மூவர் தான் காரணம்.

காங்கிரஸுக்கு ஒரு தொகுதிக்கு மூவாயிரம், நாலாயிரம் ஓட்டு தான் இருக்கிறது. பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பதுதான் மனதுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது” என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர், ஜோதிமணி எம்.பி ஆகியோர் எதிரிவினையாற்றினர்.

இந்தச் சூழலில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சியினர் தொடர்பான கருத்துகளை கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும்.

தேவையற்ற சர்ச்சைகளினால் எவ்வித பலனும் இல்லை என்பதால் ஆக்கப்பூர்வமான கட்சி பணிகளில் கவனம் செலுத்தி தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டணி தொடர்பான முடிவுகளை கட்சித் தலைவர் உரிய நேரத்தில் அறிவிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]