சென்னை: நமக்கு கொரோனா வராது என்ற அலட்சியம் மட்டும்… யாருக்கும் எப்போதும் வேண்டாம் , “நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்” என பொதுமக்களுக்கு அறிவுரை கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலக்கட்டம் இது. அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு, தங்களையும் தங்களது சுற்றத்தாரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முதலில் வைத்துக் கொள்கிறேன்.
மத்திய – மாநில அரசுகள் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி நடந்து கொள்ளுங்கள். அவசியமற்ற பயணம் அவசியப் பணிகளுக்காக மட்டும், அதற்கான இடங்களுக்கு மட்டும் செல்லுங்கள். அவசியமற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருங்கள். வீட்டில் இருந்து வேலைப் பாருங்கள். வீட்டுக்குள்ளும் போதிய தனிமனித இடைவெளியைக் கடைபிடியுங்கள்.தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள்.
மிகத்தீவிரமான உடல்நலக் கோளாறு உள்ளவர்கள் தங்களது மருத்துவரை கலந்தாலோசனை செய்த பிறகு தடுப்பூசியை பயன்படுத்துங்கள். கபசுரக் குடிநீர் முகக் கவசங்களை தொடர்ந்து அணியுங்கள். கிருமிநாசினியை பயன்படுத்துங்கள். கபசுரக் குடிநீர் அருந்துங்கள். காய்கறி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பானங்களை அருந்துங்கள். பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். சத்தான, இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள்.
பதப்படுத்தப்பட்ட பொருள்களை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். உணவுப் பொருளால் மருத்துவக் குணங்கள் கொண்ட பலவற்றையும் நமது உணவுடன் சேர்த்து பயன்படுத்தும் பழக்கம் காலம் காலமாக நம்மிடம் இருக்கிறது. அந்த பாரம்பர்யத்தை தொடந்து பின்பற்றினால் கொரோனாவை தடுக்கலாம்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகமிக மோசமானதாக பரவி வருகிறது. “கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை எட்டும்” என்று வருகின்ற செய்திகள் அச்சத்தை தருவதாக உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலை யளிக்கிறது. . ஆக்சிஜன் இல்லை வட மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் நமது பயத்தை அதிகம் ஆக்குகிறது. ‘
மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. மருந்துகள் இல்லை. ஆக்சிஜன் இல்லை. தடுப்பூசி இல்லை. இப்படி இல்லை, இல்லை என்பதே வட மாநிலச் செய்திகளாக இருக்கின்றன. முதல் அலை பரவிய போது அதை தடுக்கத் தவறியது மத்திய – மாநில அரசுகள். அந்தப் பரவலைக் கட்டுப்படுத்தவும் அந்த இரண்டு அரசுகளும் தவறியது.
முதல் தவறையாவது திருத்திக் கொண்டு அதிலிருந்து ஏதாவது பாடம் கற்றுக் கொண்டார்களா என்றால் இல்லை. முதல் தவறை விட பெரிதாக இரண்டாவது தவறைச் செய்துவிட்டார்கள். முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட ஆறு மாத காலத்தில் எந்த தற்காப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மத்திய – மாநில அரசுகள் எடுக்கவில்லை. அதன் விளைவைத் தான் நாம் கண்ணுக்கு முன்னால் இப்போது பார்க்கிறோம்.
மூன்று விலைகள் தடுப்பூசியை வைத்து நடந்த கொள்ளைகள் தான் இந்த வேதனையான நேரத்தில் மேலும் துயரமான ஒன்றாகும். மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு விலை என்பது அநியாயத்திலும் அநியாயம் இல்லையா? உயிர் அனைவருக்கும் பொதுவானது தானே?
‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்; ஒரே ரேசன் கார்டு; ஒரே வரி; ஒரே சந்தை; ஒரே மதம்; ஒரே உணவு; ஒரே மொழி’ – என்று பேசும் பா.ஜ.க. ஆட்சியில் உயிர் காக்கும் மருந்துக்கு மூன்று விலைகள்!
கொரோனா பரவல் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். மாஸ்க் அணிவதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். அனைவருக்கும் பரிசோதனை – அனைவருக்கும் தடுப்பூசி என்பதை இயக்கமாக மாற்ற வேண்டும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக் கூடாது – தொற்று ஏற்பட்டவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் ஆகிய இரண்டு முக்கிய இலக்கை கொண்டதாக அந்த இயக்கம் செயல்பட வேண்டும்.
இவற்றையெல்லாம் இப்போது இருக்கும் அரசு செயல்படுத்துகிறதோ இல்லையோ, விரைவில் புதிதாக அமைய போகிற நமது கழக அரசு நிச்சயமாக நிறைவேற்றும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுடைய அமைதியான வாழ்விற்கும் தேவையான அனைத்தையும் அமைய போகிற கழக அரசு செய்யும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம், அலட்சியம் வேண்டாம் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். மக்களைக் காப்பாற்றுங்கள், மக்களைக் காப்பாற்றுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். வரலாற்றின் பழிக்கு ஆளாகாதீர்கள், ஆளாகாதீர்கள் என்று எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.
‘இவ்வாறு அதில் கூறியுள்ளார்.