டில்லி:

சாரதா நிதி நிறுவன மோசடி  வழக்கில் கொல்கத்தா மாநகரக் காவல் ஆணையர் ராஜீவ் குமாரைக் கைது செய்யக் கூடாது என்று சிபிஐக்கு உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், அவரை  மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.

சாரதா  சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தில், காவல்துறை ஆணை யர் ராஜீவ் குமாரிடம்  விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள், மாநில காவல்துறையால் தடுத்தநிறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாரதா சீட்டு நிறுவனத்தில்  லட்சக்கணக்கான மக்கள் உறுப்பினராக இணைந்து பணம் கட்டியிருந்தனர். ஆனால், கட்டிய பணத்தை மக்களுக்கு திருப்பி செலுத்தாமல், முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக கொல்கத்தா மாநகரக் காவல் ஆணையர் ராஜீவ்குமார்  விசாரணை நடத்தி வந்த நிலையில்,  உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வழக்கு  சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த  வழக்குத் தொடர்பான ஒரு சில சான்றுகள் காணாமல் போனதை அடுத்து அது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜீவ்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகாமல் வந்ததை தொடர்ந்து, அவரை கைது செய்ய சிபிஐ முயற்சி மேற்கொண்டது.

ஆனால், சிபிஐ அதிகாரிகளை உள்ளே விட மறுத்த . மேற்குவங்கக் காவல்துறையினர் சிபிஐ அதிகாரிகளைக் கைது செய்தனர்.

‘இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவும், வழக்குத் தொடர்பான சான்றுகளை ஒப்படைக்கவும் ராஜீவ்குமாருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில், முக்கியமான ஆதாரங்கள் அடங்கிய மடிக்கணினிகள், செல்பேசிகள் ஆகியவற்றை விசாரணை அதிகாரி, முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் திருப்பி கொடுத்து விட்டதாகவும், சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியது, வழக்கை சிபிஐக்கு மாற்றுமுன் சான்றுகளை அழிக்க முயன்றது  விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சிபிஐ குறிப்பிட்டு,  வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காத மேற்கு மாநில அரசின் உயர் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் கோரியிருந்தது.

சிபிஐயின் ஆவனங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், மேற்கு வங்க ஆணையர் ராஜீவ்குமார் மேகாலயத்தின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஆணையர் ராஜீவ் குமாரை சிபி விசாரிக்கலாமே ஒழிய, அவரை  கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், வழக்கை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை குறித்து,  பிப்ரவரி 20ந்தேதி  நாள் பதிலளிக்க மேற்கு வங்கத் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.