மருத்துவ படிப்பு என்பது வசதி படைத்த மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று இருந்த நிலையை மாற்றியமைக்க 2016 – 17 ம் கல்வியாண்டு முதல் நீட் எனும் மருத்துவ படிப்பிற்கான தகுதி தேர்வு அனைத்து மாநிலங்களிலும் கட்டாயமாக்கப்பட்டது.

அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர லஞ்சமும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர ‘கேபிடேஷன் பீஸ்’சாக பெறப்படும் பெருந்தொகையும் இதனால் ஒழிக்கப்பட்டு, அனைத்து தரப்பு மாணவர்களும் மருத்துவம் படிக்க உதவியாக நீட் தேர்வு இருக்கும் என்று கூறப்பட்டது.

நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2016 – 17 ம் ஆண்டுக்கு விலக்கு பெற்றார்.

ஏழை மாணவர்களுக்கு பலனளிக்கும் என்று கூறப்பட்ட நீட் தேர்வில் இருந்து ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு விலக்கு பெற்றிருந்த போதிலும், அவரது மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அரசியல் சுனாமியை தொடர்ந்து நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது, அதோடு இந்த தேர்வு ஏழை மாணவர்களின் நலனை காக்கக்கூடியது என்ற பிரச்சாரமும் வேகமெடுத்தது.

பள்ளி இறுதி ஆண்டு படிப்பை முடித்து அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களின் தர வரிசை பட்டியல் மூலம் வெளிப்படையாக நடைபெற்று வந்த மருத்துவ கல்விக்கான அனுமதி, நீட் தேர்வுக்கு பின் பள்ளி இறுதி ஆண்டில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் ஒரு நம்பிக்கை அளித்தது.

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடிக்க, பயிற்சி மையங்களின் உதவியை நாடிய மாணவர்கள் சில லட்ச ரூபாய்களை கட்டணமாக செலுத்தி பயிற்சி பெற்றனர்.

நாடு முழுக்க நூற்றுக்கணக்கான இடங்களில் கிளைகளை நிறுவி, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, சொற்ப அளவு மாணவர்களையே வெற்றி பெற வைத்து கோடிகளில் திளைத்த பயிற்சி மையங்கள் அவர்களின் வெற்றியை கொண்டாடி மேலும் லாபமீட்டின.

தோல்வி அடைந்த நடுத்தர மாணவர்களுக்கு மனஉறுதி அளித்து அடுத்ததடுத்த முயற்சிகளில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையையும் ஊட்டியது இந்த பயிற்சி மையங்கள்.

மாணவர்களின் மருத்துவ கல்வி ஆர்வத்தை பார்த்த தனியார் மருத்துவ கல்லூரிகள், மளமளவென தங்கள் கல்விக் கட்டணத்தை உயர்த்தியதோடு, கணிசமான தொகையை ‘கேபிடேஷன் பீஸ்’சாக நிர்ணயித்தன.

 

ஒவ்வோர் ஆண்டும் நீட் தேர்வில் தகுதி பெரும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில், நீட் தேர்வு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டது, அதிக பட்ச மதிப்பெண்கள் 720.

தகுதித் தேர்வில் அதிக பட்ச மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், அரசு மருத்துவ கல்லூரிகளில் அனுமதி பெற்று வந்தனர். இதில் பெரும்பான்மையான மாணவர்கள் சில லட்ச ரூபாய்களை பயிற்சி மையங்களுக்கு செலுத்தி பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு உகந்த சட்டம் இந்த நீட் என்று கூறி வந்த அ.தி.மு.க. அரசு, தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கி நீட்டிற்கு ஈயம் பூசி இருக்கிறது.

அதிக மதிப்பெண் எடுத்தும் தகுதி அடிப்படையில் அரசு கல்லூரிகள் கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்கியது அரசு. அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு 7 லட்சம் வரை கல்வி கட்டணம் வசூலித்தது தனியார் கல்லூரி நிர்வாகம், வாய்ப்பு கிடைத்தவர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டனர்.

இந்த வாய்ப்பும் கிடைக்க பெறாதா குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள், தனியார் கல்லூரிகளின் கதவுகளை தட்டினர், தட்டியவர்க்கு தனியார் மருத்துவ கல்லூரி கதவுகளும் திறந்தது. இப்படி குறைந்த மதிப்பெண் எடுத்து தனியார் மருத்துவ கல்லூரியின் கதவுகளை தட்டிய மாணவர்களுக்கு இவர்கள் கல்வி கட்டணமாக ஆண்டொன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ரூபாய் வசூலிக்கிறார்கள்.

இவை தவிர, மருத்துவ மேற்படிப்பு, அறுவை சிகிச்சை மேற்படிப்பு படிக்க ஆண்டுக்கு 1 கோடி நிர்ணயித்து மயக்கம் போட வைக்கின்றன தனியார் மருத்துவ கல்லூரிகள்.

ஏழை மாணவர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்டது நீட் தேர்வு என்று கூறியவர்கள், இப்போதும் அதையே தான் கூறப்போகிறார்களா என்பது தான் தெரியவில்லை.