தேசிய கொடி குறித்த சட்டத்தில் டிசம்பர் 30, 2021 அன்று ஏற்படுத்திய திருத்தம் மற்றும் ஹர் கர் திரங்கா திட்டம் ஆகியவை மக்களிடையே தேசபக்தியை சிறப்பாக வளர்க்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது.

ஹர் கர் திரங்கா திட்டம் மூலம் கோடிக்கணக்கான கொடிகள் உற்பத்தி செய்யப்படுவதால் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கொடி தயாரிக்கும் துணியை இறக்குமதி செய்யப்பட்டு குஜராத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது.

வழக்கமாக தேசிய கொடியை தயாரிக்கும் எந்த ஒரு நெசவாளருக்கும் கொடி தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்படவில்லை.

கைத்தறி நெசவாளர் சங்கங்களிடமோ அல்லது உற்பத்தி நிறுவனங்களிடமோ மத்திய அரசு மட்டுமன்றி பல்வேறு மாநில அரசுகளும் தேசியக் கொடி தயாரிக்கவும் வாங்கவும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுதேசி என்ற இயக்கத்தையே மறந்தது மட்டுமல்லாமல், நெசவாளர்களைக் குறிக்கும் சர்கா (கைராட்டை) சின்னத்தின் மகத்துவத்தையும் மறந்துவிட்டார்கள் என்று ஆந்திர பிரதேச கைத்தறி தொழிலாளர் சங்கம் துணைத் தலைவர் பில்லாமரி நாகேஸ்வர ராவ் வேதனை தெரிவித்துள்ளார்.

தேசிய கொடி சட்டத்தில் திருத்ததின்படி, பாலியஸ்டர் அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட கொடி, கையால் நூற்பு மற்றும் கையால் நெய்யப்பட்ட கொடியும் அனுமதிக்கப்படும். அதற்காக, சுதேசி இயக்கத்தின் காரணத்தை மறந்து கொடி உற்பத்தியில் இருந்து கைத்தறி நெசவாளர்களை முற்றிலும் விலக்கபட்டது ஏற்புடையதல்ல என்றும் கூறினார்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு சீருடைத் துணி வழங்குவதில் விசைத்தறியை ஆந்திர மாநில அரசு தேர்வு செய்வதால் கைத்தறி நெசவாளர்கள் வேலையிழந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.