சென்னை: நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. காலை 9 மணி நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி திமுக 980 இடங்களில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது, அதுபோல 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் திமுக கூட்டணி 136 இடங்களையும் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான . ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபர் 6ந்தேதி, 9ந்தேதி என 2 கட்டங் களாக நடத்தப்பட்து. அத்துடன் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலும் 9ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்குள் நேற்று (12ந்தேதி) முதல் நடைபெற்று வருகிறது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இன்று காலை 9மணி நிலவரப்படி 1381 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான இடங்களில் 1309 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் திமுக கூட்டணி 980 இடங்களிலும், அதிமுக கூட்டணி 197 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
பாமக 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன் அமமுக 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. தேமுதிக 1 இடத்திலும், பிற கட்சிகள் சுயேச்சைகள் 92 இடங்களையும் பிடித்துள்ளன. நாம் தமிழர் கட்சி, கமலின் மக்கள் நீதி மய்யம் எந்தவொரு இடத்தையும் பிடிக்கவில்லை.
அதுபோல, 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் திமுக கூட்டணி 136 இடங்களையும் கைப்பற்றி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் அனைத்தையும் திமுக முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 13ஐ திமுகவும், அதிமுக ஒன்றே ஒன்றை மட்டுமே பிடித்துள்ளது. அதுபோல விழுப்புரம் மாவட்டத்தில் உளள 28 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக ஒன்றை மட்டுமே கைப்பற்றி உள்ள நிலையில், மற்ற 27 இடங்களை திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.