சென்னை: மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் டிமிக்கி பட்ஜெட் என திமுக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். டிஜிட்டல் முறையில் காகிதம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், , கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற 2756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்பட ஏராளமான திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், யானை பசிக்கு சோளப்பொரி போல தான் தமிழக பட்ஜெட் உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை
பெட்ரோல் மீதான வரியை பெயருக்கு ரூ.3 குறைத்துவிட்டு வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பார்கள். பெட்ரோல் விலையை 5 ரூபாய் வரையும் டீசல் விலையை4 ரூபாய் வரையும் குறைத்து இருக்க வேண்டும். பெட்ரோல் விலையை மட்டும் குறைத்துவிட்டு டீசல் விலையை குறைக்காமல் ஏமாற்றிவிட்டனர்’ என்று குற்றம் சாட்டினார்.
வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு கடன், கடன் என்கின்றனர். பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக கூறிய நிலையில், அது தொடர்பாக இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதாக கூறி மாணவர்களை திமுக அரசு குழப்பிவிட்டது. பரிசீலிக்கிறோம், குழு அமைக்கப்படும், ஆராயப்படும் என்றுதான் கூறுகிறார்கள்; தெளிவான நிலை இல்லை.
வெள்ளை அறிக்கை வெளியிட்டது அவசியமில்லாதது. 2011-ல் கஜானாவை காலி செய்து விட்டுதான் திமுக ஆட்சி சென்றது. 2011-ல் ஏற்பட்ட தாக்கம்தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீடித்தது. அடுத்து சொத்துவரி, பேருந்து, மின்கட்டண உயர்வு என எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள்.
அதிமுக ஆட்சியில் சொல்லாததையும் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், கொரோனா நிதியாக 4 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கின்றனர். அதிமுக ஆட்சியில் ரேசன் கார்டு மூலம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.