சென்னை: தி.மு.க.வின் 4 ஆண்டு சாதனைகளை விளக்குகிற புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சரின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திமுக ஆட்சி 4 ஆண்டுகளை கடந்து 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, திமுக சார்பில் பல்வேறு நலதிட்ட நிகழ்ச்சிகள், புகைப்பட கண்காட்சிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில்,   திமுகவின்  ஆட்சியின் நான்காண்டுச் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி மைதானத்தில் கொளத்தூர் தொகுதி திமுக சார்பில் ஏற்பாட்டில், மே 17,18,19 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ள திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டுச் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் திமுக அரசு, கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் மற்றும் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வெளிப்படுத்தும் வகையிலான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

புகைப்படக் கண்காட்சி அரங்கினுள் காணொளி திரை அமைக்கப்பட்டுள்ளது. அதில் திமுக அரசின் திட்டங்களை விளக்கும் 3டி காணொளி காட்சிப்படுத்தப்படுகிறது. இதனை, உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

மேலும், ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, அதில் திராவிட மாடல் அரசின் திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. திராவிட மாடல் ஆட்சியில் நான்காண்டு சாதனைகளான காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை, பிங்க் ஆட்டோ, முதல்வர் படைப்பகம், முதல்வர் கல்விச்சோலை என மாணவ மாணவிகள், மகளிர் ஆட்டோ ஓட்டுநர்கள், அணிவகுத்து துணை முதலமைச்சரை வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்த துணை முதல்வர்,  ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உள்ளரங்க நீச்சல்குளம் (ம) இறகுப்பந்து மைதானத்துடன் கூடிய முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.