சேலம்: தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவலையில்லை, ஆனால், தனது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் மன்னராட்சி முறையை கொண்டு வர திமுக முயற்சி செய்து வருகிறது என்று தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
சேலம் மாவட்டம், மல்லமூப்பம்பட்டியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்று பேசிய இபிஎஸ், ” அதிமுகவின் 30 ஆண்டுகால ஆட்சியின் காரணமாக இந்தியாவில் உயர்கல்வி படிப்பதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. கல்வி புரட்சியில் அதிமுக 30 ஆண்டு கால ஆட்சியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் திமுக பொறுப்பேற்று 2 ஆண்டு 8 மாத காலத்தில் அவர்கள் செய்த நன்மைகள் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து பொருட்களின் விலையும் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கொரோனா காலத்தில் கூட விலைவாசியை அதிமுக அரசு கட்டுக்குள் வைத்திருந்தது.
கருணாநிதி அவருக்குப் பின்பு மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி, நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியும் கலந்து கொண்டார். மன்னராட்சி முறையை கொண்டுவர திமுக முயற்சி செய்து வருகிறது. மக்களைப் பற்றி திமுக கவலைப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும்” என்றார்.