சென்னை:
தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக நாளை (மார்ச் 1ஆம் தேதி) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடை உறுதி செய்து ஒதுக்கி கொடுப்பதில் தி.மு.க. ஆர்வம் செலுத்தி வருகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து நாளை முடிவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.