டில்லி: 

நாட்டில் உள்ள மாநில கட்சிகளிலேயே அதிக வருவாய் பெற்ற மாநிலக்கட்சியாக முதலிடத்தில் உள்ளது தமிழகத்தை சேர்ந்த திராவிட முன்னேற்றக்கழகம்.

முதல் இடத்தை பிடித்த திமுக இந்தியாவின் பணக்கார கட்சி என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளது. அதிமுக இரண்டாவது இடத்துக்கு தள்ளியுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி மூன்றாவது இடத்திலும் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு நாடு முழுவதும் உள்ள மாநில அரசியல் கட்சிகளின் வருவாய் மற்றும் செலவு குறித்து ஆய்வு மேற்கொண்டது.

அதன்படி கடந்த  2015 – 16 நிதிஆண்டில் அதிக வருவாய் பெற்ற மாநிலக் கட்சிகள் மற்றும் அதிகம் செலவழிக்காத மாநிலக் கட்சிகள் எவை என்பது குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதில் நாட்டில் அதிக வருவாய் பெற்றுள்ள கட்சிகளில் முதல் இரண்டு இடத்தை தமிழகத்தை சேர்ந்த திராவிட கட்சிகளாக திமுகவும், அதிமுகவும் பிடித்துள்ளன.

அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டு தங்களது கட்சியின் வரவு செலவு விவரங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்வது வழக்கம்.

 

நாடு முழுவதும் மொத்தம் 47 உள்ள பதிவு செய்யப்பட்ட மாநில அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் 32 மாநில கட்சிகள் மட்டுமே தங்கள் கட்சியின் வரவு செலவு குறித்த தகவலை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளது.

கடந்த  2015 – 16 நிதியாண்டுக்கான வரவு – செலவு கணக்கை 32 கட்சிகள் மட்டுமே தாக்கல் செய்துள்ளன. பீகாரை சேர்ந்த  சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்பட  15 அரசியல் கட்சிகள் கணக்கை தாக்கல் செய்ய வில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  32 அரசியல் கட்சிகளின் மொத்த வருவாய், 221.48 கோடி ரூபாய். இதில்,110 கோடி ரூபாயை இந்த கட்சிகள் செலவிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, நாட்டிலேயே அதிக வருவாய் பெறும் மாநில கட்சிகளில் திமுக முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மொத்த வருவாய் 77.63 கோடி என்றும்,  இது மொத்த வருவாயில் 49 சதவிகிதத்திற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டாவது  இடத்தை அதிமுக பிடித்துள்ளது. அதன் மொத்த வருவாய்  54.93 கோடி ரூபாய்.  தெலுங்கு தேசம் கட்சி 15.97 கோடி ரூபாயுடன் 3-வது இடத்தில் உள்ளது. 

அதிகம் செலவழித்த கட்சிகளில், ஐக்கிய ஜனதா தளம் 23.46 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி, 13.10 கோடி ரூபாயும், ஆம் ஆத்மி, 11.09 கோடி ரூபாயும் செலவழித்துள்ளன.

இதில், 14 கட்சிகள் வருவாயை விட அதிகமாக செலவழித்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளன.

ஜார்க்கண்ட் விகார் மோர்ச்சா, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகியவை, வருவாயை விட இரண்டு மடங்கு அதிகம் செலவழித்துள்ளன.

தி.மு.க.-அ.தி.மு.க., – ஏ.ஐ. எம்.ஐ.எம். ஆகியவை வருவாயில், 80 சதவிகித பணத்தை சேமிப்பாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளன.

மேலும், இந்த கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடை குறித்து அளிக்கும் ஆதாரங்கள் அனாமதேயமாக இருப்பதாகவும், அதுகுறித்து அறிய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

 

இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.