மாமல்லபுரம்: அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி தான். தைலாபுரத்தை தி.மு.க டேக் ஓவர் செய்துள்ளது. தி.மு.க-வில் இருப்பவர்கள் எதிரிகள்கள்; ஐயாவை சுற்றி இருப்பவர்கள் துரோகிகள்.” என்று அன்புமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தனக்கு எதிராக ஜி.கே. மணி  சூழ்ச்சி செய்து வருவதாகவும்,   வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக துரோகம் செய்தவர் ஜி.கே.மணி என்றும்,   அய்யாவிடம் தவறான தகவல்களை சொல்லி திசை திருப்பி விட்டார் என்றும்  குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  ஏற்பட்டு வந்த  கருத்து மோதல், தற்போது கட்சியை கைப்பற்றும் வகையில் தீவிரமாக உள்ளது. இதனால், ராமதாஸ் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட செயலாளர்கள் உள்பட பலரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தும், தனது ஆதரவாளர்களை புதிதாக நியமித்து வருகிறார். மேலும்,  தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களுடனும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில், அன்புமணி ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி, கட்சியின் தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.  இதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. இதை எதிர்த்து ராமதாஸ் சட்டநடவடிக்கையில் இறங்கி உள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அன்புமணி தனது பெயரை எங்கும் பயன்படுத்தக்கூடாது என அறிவித்தார். இது  பாமக மோதலை மேலும் தீவிரமடைய செய்துள்ளது.

இந்த நிலையில், இன்று  மாமல்லபுரத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பா.ம.க-வின் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாநகராட்சி பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அன்புமணி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசும்போது,  தமிழ்நாட்டில் விரைவில் மெகா கூட்டணி அமையும். அந்த கூட்டணியில் பாமக இடம் பெறும் என்றார். பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு காரணம் திமுக என்றும் குற்றம்சாட்டினார்.

  தி.மு.க சூழ்ச்சி செய்து வன்னியர்களையும், பட்டியலின மக்களையும் ஒன்று சேர விடாமல் பார்த்துக் கொள் கிறார்கள். கேடுகெட்ட தி.மு.க இரண்டு சமுதாயங்களுக்கு இடையில் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். இது அனைவருக்கும் தெரியும்.

சில தி.மு.க கைக்கூலிகள், துரோகிகள் தற்போது அய்யாவை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்கப் போவது கிடையாது.

நானும் இது கடந்து போகும், இது கடந்து போகும்… என்று எவ்வளவு தான் தாங்கிக் கொண்டு செல்வது. எவ்வளவு அசிங்கப்பட்டுள்ளேன் அவமானப்பட்டுள்ளேன் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றேன் ஏன்? எதற்காக ? உங்களுக்காகத்தான்…  இந்த கட்சிக்காக தான்…  இந்த சமுதாயத்திற்காக தான்.

இந்த துரோகிகள் எல்லாம் சேர்ந்து ஐயாவை என்ன மாதிரியான மனநிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்?

இந்த துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்கப் போவது கிடையாது , இவர்கள் மூலம் தைலாபுரத்தை திமுக டேக் ஓவர் செய்துவிட்டது.

இன்னும் மூன்று மாதத்தில் யார் யார் சிறைக்கு செல்ல போகிறார்கள் என பார்த்துக் கொண்டிருங்கள்.

டெல்லியில் 30 பேர் கலந்து கொண்டு 3000 பேர் கலந்து கொண்டதாக அய்யாவிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள்.

நாம் நடத்தும் கூட்டங்களில் கூட்டம் குறைவாக இருப்பதாக அய்யாவிடம் தவறான தகவல்களை சொல்லி வருகிறார்கள்.

என்னை தலைவராக்கிய அடுத்த நாளிலிருந்து ஜி.கே மணி சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார். சூழ்ச்சி செய்து அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி தான். ஜி.கே மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள்.

ஐயாவிடம் உங்களை அப்படி சொல்லிவிட்டார் இப்படி செய்துவிட்டார் என்று என்னைப் பற்றி தவறான விஷயங்களை எல்லாம் சொல்லி ஐயாவுக்கும் எனக்கும் பகையை உருவாக்கியது ஜிகே மணி தான். குழந்தை மாதிரி உள்ள ஐயாவை ஜிகே மணி உள்ளிட்டோர் ஏமாற்றி வருகிறார்கள்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு தோற்றுவிட்டது. ஆனால் வெற்றி பெற்றதாக ஐயாவிடம் தவறான தகவல்களை சொல்லி ஐயாவை ஏமாற்றி வருகிறார்கள்.  இவர்களுடைய செயல் திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி வருகிறார்கள் இவர்களுக்கு பின்னால் இருப்பது திமுக தான் நூறு விழுக்காடு காரணம் திமுக தான்.

தி.மு.க.வின் கைக்கூலிகள் தான் இவர்கள். இவர்களெல்லாம் யார் யாரிடம் எவ்வளவு (பணம்) வாங்கி இருக்கிறார்கள் என்ற அனைத்து விவரங்களும் என்னிடம் இருக்கிறது. ஊடகங்களில் தினசரி பொய்யைச் சொல்லி திசை திருப்பி வருகிறார்கள்.  அருள், ஜி கே மணி போன்றோர் செய்யும் பொய்களை பாமகவினர் நம்ப வேண்டாம். அவர்களுக்கு பதில் சொல்லும் பெயரில் நீங்கள் பதிவுகளை போடாதீர் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர். பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னமும் கட்சியும் நம்மிடம் தான் உள்ளது.

தி.மு.க-வில் இருப்பவர்கள் எதிரிகள் ஆனால் ஐயாவை சுற்றி இருப்பவர்கள் துரோகிகள். அந்த தரப்பினரால் இப்படி ஒரு கூட்டம் போட முடியுமா நிர்வாகிகள் இருக்கிறார்களா? வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் கூட ஜிகே மணி தான் பெரிய துரோகம் செய்து இருக்கிறார். உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்து ஆறு மாதங்கள், ஒரு வருடங்கள் கடந்துவிட்ட பிறகு நான் அய்யாவிடம் சொன்னேன் போராடலாம், களத்திற்கு செல்லலாம் நாம் யார் என்று காட்ட வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் ஜி.கே. மணி உடனடியாக ஐயாவிடம் சென்று ஐயா தி.மு.க இட ஒதுக்கீடு கொடுப்பதாக சொல்லிவிட்டார்கள், நாம் போராட்டம் செய்ய வேண்டாம் என ஐயாவின் போராட்டத்தன்மையை ஜி.கே மணி குறைத்து விட்டார்.

இது சாதாரண துரோகம் கிடையாது, ஜி.கே. மணி இந்த சமுதாயத்திற்கு செய்கின்ற துரோகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய போராட்டத்தை செய்திருந்தால் திமுக வேறு வழி இல்லாமல் இன்றைக்கு இட ஒதுக்கீட்டை கொடுத்திருப்பார்கள். இப்படி இந்த சமுதாயத்திற்கு இவ்வளவு துரோகம், சூழ்ச்சி செய்தவர் ஜி.கே மணி. என் மனதில் இன்னும் நிறைய இருக்கிறது வேண்டாம் என நினைக்கிறேன்.

பா.ம.க-வை கைப்பற்ற நாம் எந்த தவறும் செய்யவில்லை தவறு செய்தது அவர்கள்தான்.  சட்டரீதியாகவும், கட்சி விதிகளின்படியும் பா.ம.க எங்களிடம் தான் தான் உள்ளது. அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்திற்கு சென்றால் வழக்கு  ஏழு வருடங்கள் வரை கூட  வழக்கு நடக்கும். எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது. நாம் எந்த தவறும் செய்யவில்லை, அவர்கள் தான் தவறு செய்திருக்கிறார்கள் அதை இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும் களத்தில் இறங்கி பாடுபடுங்கள்.

இவ்வாறு ஆவேசமாக பேசினார்.

[youtube-feed feed=1]