சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜக தலைவர்களை டெல்லி சென்று சந்தித்த நிலையில், அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அவர் வகித்து வந்த கட்சிப்பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
திமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்த ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ குகசெல்வம், நேற்று திடீரென தமிழக பாஜக மாநில தலைவர் முருகனுடன் டெல்லி பறந்தார். அங்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது.
ஆனால், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுத்த கு.க. செல்வம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு லிஃப்ட் அமைப்ப தற்காகவே பியூஷ் கோயலை சந்தித்ததாக கூறியவர், திமுகவில் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும், இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களை கண்டிக்க வேண்டும் என்றும் பேட்டி அளித்தார்.
இந்த நிலையில், கு.க.செல்வம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் திமுக தலைவர் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி.மு.க. தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் அவர்கள், அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் (05-08-2020) விடுவிக்கப்படுகிறார்.
தி.மு.க. தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்திலிருந்து நீக்கி வைப்பதுடன், ‘கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்க கூடாது’ என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.