சென்னை,
டைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
thirunavu
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்திய மூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 3 தொகுதியிலும், புதுவையில் ஒரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகள் ஏற்கனவே திமு.க. போட்டியிட்ட தொகுதிகள்.
எனவே இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்வோம்.
எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அனைத்து தலைவர்களும் ஒருங்கிணைந்து தான் செயல்படுகிறோம்.
ஒவ்வொருவரின் ஆலோசனையும் கேட்டுத்தான் கட்சியின் வளர்ச்சிக்காக செயல்படுகிறோம். ஆனால் எங்களுக்குள் ஒருவரைப் பற்றி ஒருவர் மேலிடத்தில் புகார் கூறுவதாக சொல்லப்படும் தகவல்கள் தவறானது.
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பா.ஜனதா அரசு கொண்டு வர முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போம். இந்த சட்டத்துக்கு எதிராக போராடும் அவர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும். மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதை கைவிட வேண்டும்.
காவிரி பிரச்சினையில் மோடி அரசு தமிழகத்துக்கு செய்துவரும் துரோகத்தை மறைப்பதற்காக மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன் உள்பட தமிழக பா.ஜனதா தலைவர்கள் காங்கிரசை விமர்சித்து வருகிறார்கள்.
பா.ஜனதாவின் பாராட்டும் சான்றிதழும் எங்களுக்கு தேவையில்லை. உண்மையில் தமிழத்துக்கு நல்லது செய்ய விரும்பினால் பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துங்கள்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு மண்எண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களுக்கு வழங்கி வந்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு வழங்கி வந்த உணவு மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. அதனால் தமிழக அரசுக்கு 21 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் சீனவிலிருந்து சட்டவிரோதமாக இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவில் பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆகவே  சீனப்பட்டாசை தடை செய்ய வேண்டும்.
திருச்சி உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய தஞ்சையை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி சுவாமிநாதன் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவரது மனைவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த குடும்பத்துக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். மருத்துவ செலவினையும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறது. அவரது மகளின் கல்லூரி படிப்பு செலவையும் காங்கிரசே ஏற்றுக் கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி. பி.ஐ. கட்சி தலைவர் தெக லான்பாகலி ஆகியோர் திருநாவுக்கரசரை சந்தித்தனர். பொது சிவில் சட்டத்துக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
பேட்டியின் போது குமரி அனந்தன், கோபண்ணா, சிரஞ்சீவி, தணிகாசலம் உள்பட பலர் உடன் இருந்தனர்.