சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நேற்று (ஜனவரி 20) மாலை நடைபெற்றது. இதில், திருச்சியில் மாநில மாநாடு நடத்துவது உள்பட 4 தீர்மனாங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தேர்தலை நோக்கிய 4 முக்கிய பிரம்மாண்ட செயல்திட்டங்கள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளுங்கட்சியான தி.மு.க தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள வேண்டிய உத்திகள், கூட்டணி குறித்த ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகளின் தற்போதைய கள நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஸ்டாலின் தலைமையில் நடந்த அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு;
வெல்லும் தமிழ்ப் பெண்கள் வீடு வீடாக மகளிர் பரப்புரை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம், தோழி விடுதிகள், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என எண்ணற்ற மகளிர் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டு பெண்களை உலகளவில் ‘வெல்லும் தமிழ்ப்பெண்களாக’ மாற்றியுள்ள தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2026 தேர்தலில் வென்று திராவிட மாடல் 2.0 அமைந்திடும் வகையில், நமது திராவிட மாடல் அரசு பெண்களுக்குச் செய்துள்ள சாதனைத்திட்டங்களைப் பெண்களிடம் எடுத்துக்கூறி மகளிரின் முழுமையான ஆதரவு கழகத்திற்கு மட்டுமே என்ற நிலையை உறுதி செய்திட வேண்டும் என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
கழக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 29.12.2025 அன்று மேற்கு மண்டல மகளிரணி சார்பில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிரணி மாநாடு பெற்ற மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து வரும் 26.01.2026 அன்று டெல்டா மண்டல ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு தஞ்சையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளை அடுத்து,
பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட வீடுகளில் வீடு வீடாகப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அப்போது கழக அரசின் மகளிர் நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், சாதனைத் திட்டங்களின் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மக்களிடம் கழகத்திற்கான ஆதரவைத் திரட்டிட வேண்டும் எனவும், இந்தப் பரப்புரை மூலம் பெண்கள் வாக்கு சிந்தாமல் சிதறாமல் முழுமையாக கழத்திற்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
தமிழ்நாடு தலைகுனியாது – பரப்புரை
பிப்ரவரி-1 முதல் பிப்ரவரி-28 வரை தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை மேற்கொள்ளும் வகையில் நட்சத்திரப் பரப்புரையாளர்களைத் தேர்ந்தெடுத்து தலைமைக்கழகம் அனுப்பி வைத்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
நட்சத்திரப் பரப்புரையாளர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தலா 4 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் அல்லது அரங்கக் கூட்டங்களாக பரப்புரை செய்வதுடன், தங்கள் சுற்றுப்பயணத்தின் போது மண்டலப் பொறுப்பாளருடன் இணைந்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் முக்கியப் பிரமுகர்கள், இளைஞர்கள்/ மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரை சந்தித்தும் கலந்துரையாடலாக பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இப்பரப்புரைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் சிறப்புறச் செய்து ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை வெற்றியடையச் செய்திடுவது என இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ – வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு
கழக இளைஞரணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 14.12.2025 அன்று திருவண்ணாமலையில் வெற்றிகரமாக நடைபெற்ற வடக்கு மண்டல இளைஞரணி சந்திப்பைத் தொடர்ந்து, பிப்ரவரி 7-ல் விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலைத் திறம்பட எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டங்களை நடத்தி வெற்றிக்கான வியூகத்தை வகுத்திடுமாறு மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழக உடன்பிறப்புகளால் வெற்றிக்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கழக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA-2), 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் (BLC) மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) ஆகியோரைத் தேர்தல் பணிக்கு முழுமையாகத் தயார் செய்யும் வகையில் ”என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” – வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடுகளை நான்கு மண்டலங்களில் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
அதன்படி பிப்ரவரி-11 அன்று சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களுக்கான மாநாட்டை தாம்பரம் – படப்பையிலும், பிப்ரவரி-14 அன்று வடக்கு மண்டலம் மாநாட்டை திருப்பத்தூரிலும், பிப்ரவரி-21 அன்று தெற்கு மண்டலம் மாநாட்டை மதுரையிலும், பிப்ரவரி-27 அன்று மேற்கு மண்டலத்திற்கான மாநாட்டை கோவையிலும் நடத்திட இம்மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்- கழக மாநில மாநாடு
சட்டப்பேரவைத் தேர்தலில் கழத்தின் வெற்றியை பறை சாற்றும் வகையில் மார்ச்-8 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் 10 லட்சம் கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளும் ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ மாபெரும் கழக மாநில மாநாட்டை நடத்துவதென இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
[youtube-feed feed=1]