சென்னை: தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவரது உயிருக்கே பாதுகாப்பு இல்லையா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சரிதா. சாதி பாகுபாட்டுக்கு ஆளாகுவதாகவும், கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தம்மை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர விடாமலும், பெயர்ப் பலகைகளில் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா என்று எழுத விடாமலும் பாலசுப்பிரமணியம் என்பவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சரிதா புகாரில் தெரிவித்து இருந்தார்.
இந்த சம்பவம் அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதிரீதியாக அவமானப்படுத்தப்பட்டும், கொலை மிரட்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார். தன்னை அவமானப்படுத்துபவர்கள் யார் என்று குறிப்பிட்டே கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார்.
ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? சரிதாவுக்கு சட்டப்பாதுகாப்பு தர வேண்டும். அவரை மிரட்டுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்! என்று கூறி உள்ளார்.