சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைமை பதவிகள் சில திமுக கூட்டணிக்கு ஒதுக்கி திமுக தலைமை அறிவித்த நிலையில், அதில் சில இடங்களை ஆளுங்கட்சியினரே கூட்டணி கட்சி வேட்பாளரருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இது கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், திமுக தலைமை மீது அதிருப்தி கொண்டுள்ளனர்.

உள்ளாட்சி தலைமை பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி கள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று, 22ந்தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மார்ச் 2ந்தேதி கவுன்சிலர்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து மேயர், துணைமேயர் உள்பட நகராட்சி, பேரூராட்சி தலைமை பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சி தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றி உள்ளது. ஒரே ஒரு மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு மேயராக ஆட்டோ டிரைவர் சரவணன் பொறுப்பேற்றுள்ளார். இதுமட்டுமின்றி பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக தலைவர் பதவியை பிடித்துள்ளது. இந்த தேர்தலின்போது பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

திமுக வேட்பாளர்களுக்கு எதிராகவே திமுகவினரே போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களிலும் திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.  இது திமுகவின் கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி பொ. மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.  ஆனால், இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது, திமுக உறுப்பினர்கள், விறுத்தைகள் வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளரை  வெற்றி பெற வைத்துள்ளனர்.  திமுகவின் சாந்தி புஷ்பராஜ் வெற்றிபெற்று இருக்கிறார். 

நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட விசிக வேட்பாளரை வீழ்த்தி திமுக வெற்றி பெற்றுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக வேட்பாளர் ஜெயந்தி 23 வாக்குகள் பெற்று இங்கு வெற்றிபெற்றார் .

கடலூர் கடலூர் மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட திமுக, காங்கிரசை வீழ்த்தி திமுக வெற்றி பெற்றது.  மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேல்முருகன்  போட்டியிட்ட நிலையில், அவருக்கு திமுக வாக்களிக்காமல் ஏமாற்றி உள்ளது. இங்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்சாத் பேகம் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கொடுத்த வாக்கை திமுக காப்பாற்றவில்லை என்று கூறி காங்கிரஸ் கட்சியினர் திமுகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன.

தேனி நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு திமுகவினர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மறுத்துவிட்டனர். தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் சற்குணத்தை எதிர்த்து திமுகவின் ரேணுப்பிரியா வெற்றிபெற்றார்.

திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சி தலைவர் பதவி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பிர மணியம் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டார். ஆனால்,  அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் குமார் களமிறங்கினார். இதில், திமுகவே தலைவர்பதவியை கைப்பற்றியது. கூட்டணிக்கு திமுகவினர் துரோகம் செய்து விட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

குமரி மாவட்ட குளச்சல் நகராட்சியில் திமுகவிற்கு உள்ளேயே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு திமுக வேட்பாளரை வீழ்த்தி இன்னோரு திமுக வேட்பாளர் போட்டியிட்டு  வெற்றி. திமுக அறிவித்த ஜான்சன் சார்லசை வீழ்த்தி திமுக போட்டி வேட்பாளர் நசீர் தலைவராக தேர்வு பெற்றுள்ளார்.

இதுபோன்று பல இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக துரோகம் செய்துள்ளது. இதனால் விசிக, காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் திமுக தலைமைமீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.