திமுக அதிர்ச்சி: சுயேச்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்கள்….?

Must read

சென்னை:
ள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டி உள்ளது. காங்கிரசுக்கும் குறைந்த அளவே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பல இடங்களில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர்கள் சுயேச்சையாக களம் இறங்குவார்கள் என தெரிகிறது. இதனால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்து உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் இடங்கள்  குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர், திமுகவின் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  காங்கிரசின் கோரிக்கையை ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி உள்ளது.
தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளை கண்டுகொள்ளாமல் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.
அதிமுக தனது கூட்டணி கட்சிகளை பற்றி கண்டுகொள்ளாமல் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அதேபோல் திமுக தனது கட்சி கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுக்கு இடங்கள் சரிவர ஒதுக்காமல் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே திமுக ஒதுக்கியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.  திமுகவினருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தத் தயங்கமாட்டோம் என எச்சரித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அண்மையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசினார். அப்போது காங்கிரஸுக்கு குறிப்பிட்ட சதவீதத்தின் அடிப்படையில் இடங்களை ஒதுக்க வேண்டும் என அவர் கோரினார். ஆனால், அதை ஏற்க ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
காங்கிரஸின் மாவட்டத் தலைவர்களுடன் திமுக மாவட்டச் செயலர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர். வெற்றி வாய்ப்புக்கேற்ப காங்கிரஸுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் என ஸ்டாலின் கூறினார். அதை திருநாவுக்கரசரும் ஏற்றுக் கொண்டார்.
குறைந்தபட்சமாக  10 சதவீத இடங்களாவது காங்கிரசுக்கு திமுக ஒதுக்கும் என  திருநாவுக்கரசர்  எதிர்பார்த்தார். ஆனால், காங்கிரசுக்கு ஒரு சில இடங்களை மட்டுமே ஒதுக்க திமுக தலைமை முன்வந்துள்ளது. இது காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
%e0%ae%9c%e0%af%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-1-200x300
திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. அவற்றில் 14, 37, 44 ஆகிய 3 வார்டுகளை மட்டுமே காங்கிரஸுக்கு திமுக தலைமை ஒதுக்கி உள்ளது. இதற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.ஜெரோம் ஆரோக்கியராஜ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அவர்  கூறியதாவது: திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலர் கே.என்.நேருவிடம் 2 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம். 8 வார்டுகள் வரை கேட்டோம். அவரும் தன் முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், திடீரென 3 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 15 வார்டுகள் ஒதுக்கப்பட்டன. 2011-ல் நாங்கள் அனைத்து வார்டுகளிலும் தனித்துப் போட்டியிட்டு, ஓர் இடத்தில் வெற்றி பெற்றதுடன், அனைத்து வார்டுகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றோம். காங்கிரஸுக்கு செல்வாக்கு உள்ள மாநகராட்சிகளில் இதுவும் ஒன்று.
திருச்சி மாநகராட்சியில் காங்கிரஸுக்கு 3 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றால், திமுக வேட்பாளர்களை எதிர்த்து எங்களது கட்சியினர் நிற்பதை தடுக்க முடியாது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடமும் தெரிவித்துவிட்டேன் என்றார். மேலும்,  திமுகவினரை எதிர்த்து காங்கிரஸார் சுயேச்சையாகப் போட்டியிட்டால், அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டேன் என்றும்,
இதுகுறித்து திமுக தலைமையுடன் திருநாவுக்கரசர் பேசுவதாகச் சொல்லியுள்ளார்.
திமுகவின் முடிவில் மாற்றமில்லாவிட்டால், எங்கள் முடிவிலும் மாற்றமில்லை என்றார் அவர்.
சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் காங்கிரஸுக்கு 8, 9, 16, 17, 36 ஆகிய 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. சேலம்  திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் 6 வார்டுகள் வரை ஒதுக்குவதாகக் கூறி, அதற்கான உடன்பாட்டிலும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், திமுக தலைமை 5 வார்டுகள் மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் சேலம் காங்கிரஸாரும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து  சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பி.மேகநாதன்: சேலம் மாநகராட்சியில் காங்கிரஸுக்கு 6 வார்டுகள் வரை மட்டுமே ஒதுக்க, சேலம் திமுக நிர்வாகிகள் முன்வந்ததில் எங்களுக்கு உண்மையில் போதுமான திருப்தி இல்லை.
எனினும், கூட்டணி தர்மத்துக்காக உடன்பட்டோம். தற்போது, அதையும் குறைத்து அறிவித்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. 8, 9, 16, 17, 36 ஆகிய வார்டுகளுடன் 38-ஆவது வார்டும் காங்கிரஸுக்கு என்றுதான் பேசி முடிக்கப்பட்டது. ஆனால், 38-ஆவது வார்டு காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை.
இந்த வார்டை எங்களுக்கு திமுக தலைமை ஒதுக்காவிட்டால், எங்களது முடிவு தீவிரமாக இருக்கும் என்றார் அவர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸுக்கு 7 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது ஓரளவு திருப்தி அளிப்பதாகவே தூத்துக்குடி மாநகர் மாவட்டத் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.எஸ். அருள் கூறினார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரசுக்கு சொற்ப இடங்களே திமுக தலைமை ஒதுக்கியதற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.
அதேபோல் சென்னை மாநகராட்சியிலும் மொத்தமுள்ள 200 வார்டுகளில் ஒன்றை எண் அடிப்படையிலேயே காங்கிரசுக்கு வார்டுகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. இதையறிந்த காங்கிரஸ் பகுதி செயலாளர்கள், தொண்டர்கள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை சந்தித்து தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
 
திமுக தலைமை காங்கிரசாருக்கு உரிய மரியாதை அளிக்காமல் முரண்டு பிடித்தால் திமுக வேட்பாளர்களை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் சுயேச்சையாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

More articles

Latest article