சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்ஆர் இளங்கோ ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம்  உட்பட 17 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான  தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்பை ஏற்கனவே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் மூன்று பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்ற விவரங்களை திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செய்திகுறிப்பு ஒன்றின் மூலம் திமுக தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே ரங்கராஜன் ஆகிய 6 பேரின்  மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஏப். 2ம் தேதியுடன் முடிகிறது.

மார்ச் 26 ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு வரும் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். பின்னர் 16ம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்படும்.

19ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும். இந்த வேட்பாளர்  பட்டியலில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.