மும்பை: 
டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசே 100 சதவிகிதம் பொறுப்போற்றக வேண்டும் என்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில், கடந்த வாரம் பாஜக தலைவர்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக நடத்திய பேரணியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து கலவரம் வெடிக்க ஆரம்பித்தது.

அமெரிக்க அதிபர் டெல்லி வந்திருந்த சூழ்நிலையிலும் கலவரம் வடகிழக்கு டெல்லியில் பரவ ஆரம்பித்து, தற்போது வரை இந்த கலவரத்தில் 42 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், டெல்லி பற்றி எரியும் போது, கலவரத்தை கட்டுப்படுத்த எந்த உறுதியான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ், டெல்லி கலவரம் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவோம் என அறிவித்துள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசும் தற்போது இந்த விவகாரத்தை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளது.

தேசிய தலைநகர் பற்றி கடந்த சில நாட்களாக பற்றி எரிகிறது. டெல்லி தேர்தலில் வெற்றி பெற முடியாத மத்தியில் ஆளும் கட்சி வகுப்பவாதத்தைத் தூண்டி, பிரிவினையை வளர்த்து வருகிறது என மகாராஷ்டிராவின் மூத்த தலைவர் கூறியுள்ளார்.

முன்னதாக கலவரத்திற்கு பொறுப்பேற்று, அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. இன்று நடக்கவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில், இந்த வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தும் என தெரிய வந்துள்ளது.