சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் கமிஷனிடம் திமுக   அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திடீரென மனு கொடுத்தார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச்சில் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

பின்னர், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில், தற்போது தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், திமுக சார்பில் வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இந்த முறையும் பணப்பட்டுவாடா போன்ற முறைகேடுகளை நடைபெறக்கூடாது என்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், திமுக சார்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி தமிழக தலைமை தேர்தல் கமிஷன் ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

அதில், ர்.கே.நகரில் உள்ள  900 தெருக்களிலும் சி.சி.டி.வி பொறுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும்,  இரவு நேரங்களில் பணப்பட்டுவாடாவை தடுக்க தெருவுக்கும் கூடுதல் துணை ராணுவம் ஈடுபடுத்த வேண்டும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், முறைகேடுகள் ஏதும் நடைபெறாதவாறு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்  என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.