டில்லி

க்களவையில் தமிழக பன்னாட்டு விமான நிலையங்கள் தனியார் மயமாகிறதா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கேள்வி எழுப்பினார்.

தற்போது டில்லியில் நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் நடந்து வருகிறது.  இந்த தொடரில் திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி ஆர் பாலு, “மத்திய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் நாட்டில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதா? தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதா?  எந்தெந்த விமான நிலையங்கள் தனியார் மயமாகிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு விமான துறை இணையமைச்சர் வி கே சிங், “கடந்த 2022 தொடங்கி 2025ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் நாட்டில் உள்ள 25 விமான நிலையங்களைச் சிறந்த முறையில் விரைந்து மேம்படுத்தவும், திறம்பட இயக்கிடவும் சிறப்பான மேலாண்மைக்காகவும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மத்திய அரசு – தனியார் பங்கேற்பு திட்டத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ள 25 விமான நிலையங்களில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னை விமான நிலையங்களும் அடங்கும்.

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தின் பொதுநலனைக் கருத்தில் கொண்டு தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் எடுத்துள்ளது.  விமான நிலைய வசதிகளை மேம்படுத்தவும், சிறப்பாக இயக்கவும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.

ஆயினும், விமான நிலையங்களின் நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் அனைத்தும் ஆணையத்தின் சொத்துக்களாகவே தொடரும்.  சொத்துக்கள் அனைத்தும் உரிமக் காலம் முடிவடைந்தவுடன் மீண்டும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வசம் திரும்பி வந்துவிடும்.” எனப் பதில் அளித்துள்ளார்.