டில்லி

ங்குச் சந்தை முறைகேட்டைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த ஆண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் பொருளாதாரம் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது.  மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் மத்திய சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் பேசிய போது மத்திய அரசுக்கு கேள்விகள் எழுப்பி உள்ளார்.

தயாநிதி மாறனின் கேள்விகளின் விவரங்கள் பின்வருமாறு:

* தேசிய பங்கு சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி தனியார் நிறுவனத்திற்கோ அல்லது தனி நபர்களுக்கோ சட்டவிரோதமாக தரவுகளை பகிர்ந்துள்ளாரா?


* எனில் எந்தெந்த தனியார் நிறுவனங்களுக்கு அல்லது தனி நபர்களுக்கு தரவுகள் பகிரப்பட்டுள்ளது என்ற விவரங்களை தெரியப்படுத்தவும்.

* இதுகுறித்து 2018ம் ஆண்டே புகார் பதிவாகி வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2022ம் ஆண்டான தற்போது தான் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இத்தனை வருட காலதாமதத்திற்கு என்ன காரணம் என்பதை தெரியப்படுத்தவும்.

* தேசிய பங்கு சந்தையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்வாக உள்ளதா மற்றும் எதிர்காலத்தில் சைபர் தாக்குதல் போன்ற பெரிய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகுமா?

* வர்த்தக தளங்களின் பாதுகாப்பை கடினப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா எனவும், எனில் சம்பந்தப்பட்ட நபர்கள் உட்பட முக்கிய தகவல்களின் கசிவை கண்டறியும் இணையப் பாதுகாப்பு குழுக்களின் விவரங்களுடன் தெரியப்படுத்தவும்.

* தேசிய  பங்கு சந்தையில் கண்டறிப்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் மீது ஒன்றிய அரசு/ செபி எடுத்த நடவடிக்கைகள் என்ன

* எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க தேசிய பங்கு சந்தை மற்றும் ரிசர்வ் வங்கி பட்டியலில் உள்ள அந்நிய செலாவணி குறித்து மதிப்பாய்வு செய்யப்படுமா எனவும், எனில் இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

எனத் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.