மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கொதித்தெழுந்துள்ளனர். தலைநகரில் 13வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதையடுத்து, இன்று நாடு முழுவதும் பந்த் நடைபெற்று வருகின்றனர்.
தமிழகத்தில், மாநில அரசு விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிராக செயல்படுவதால், தடையை மீறி திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவித்து நடத்தி வருகின்றனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ. டி.யு.சி. உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரும், விவசாயிகள் சங்கத்தினரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில், ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளன. சில இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் மூடப்பட்டு உள்ளன.
சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் 27 இடங்களில் போராட்டம் நடைபெற்றன.
சென்னையில் 27 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் கே.ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
பெரம்பூர் அம்பேத்கார் கல்லூரி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.டி. சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு சுதர்சனம் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அம்பத்தூர் பஸ் நிலையம், ஆவடி அண்ணா சிலை அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இதற்கிடையே இன்று காலை சென்னையில் உள்ள 36 போக்குவரத்து பணிமனைகள் முன்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
முழு அடைப்பு காரணமாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் 10 ஆயிரம் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.