சென்னை: திமுக பொதுக்குழு 9ந்தேதி கூட உள்ள நிலையில், இன்று திமுக தலைவர் பதவிக்கு, தற்போதைய திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது  வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் கடுமையான போட்டிகளுக்கு இடையே  நடைபெற்ற நிலையில், தலைவர், பொதுச் செயலாளா், பொருளா ளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க  அக்டோபர் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு தனியார் பள்ளியில் கூடுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. அதன்படி,  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று  திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் முக ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மூத்த அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முன்னதாக அவர், கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்து ஏராளமான விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதேபோல பொதுச்செயலாளராக துரை முருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட வேண்டுமென்று விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 5-ம் ஆண்டில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்து வரும் நிலையில் மீண்டும் 2-வது முறையாக அவர் போட்டியின்றி திமுக தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.