சென்னை: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் வரும்  28ந்தேதி திமுக பவள விழ பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள  கூட்டணி கட்சிதலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க.வின் 75-வது ஆண்டு பவள விழா, பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் பிறந்தநாள் விழா என 3 விழாக்களையும் ஒன்றாக சேர்த்து தி.மு.க. முப்பெரும் விழாவாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.  இதைத்தொடர்ந்து,   திமுக பவளவிழா பொதுக்கூட்டம் வரும் 28-ந்தேதி காஞ்சிபுரத்தில்   நடைபெற உள்ளது. இந்த பிரமாண்டமான  கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் காஞ்சியில் பவள விழா பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் டெல்லி தலைமைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக, சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். அதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திருச்சி சிவா, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், காஞ்சிபுரம் பவளவிழா பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது குறித்தும், புதிய மாவட்ட செயலாளர்கள், 2026 சட்டசபை தேர்தல் போன்ற விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த கூட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைமை வெளியிடடது, அதில் , திமுக பவள விழா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் வரும் 28ம்தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

கூட்டத்துக்கு, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தரம் வரவேற்புரையாற்றுகிறார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த கூட்டத்தில் கி. வீரமணி, இரா. முத்தரசன், எம்.எச்.ஜவாஹிருல்லா பொன்.குமார் கருணாஸ், கு. செல்வப்பெருந்தகை, வைகோ, கே.எம்.காதர் மொய்தீன், ஈ.ஆர்.ஈஸ்வரன், எர்ணாவூர் நாராயணன், அதியமான், தொல். திருமாவளவன், தி.வேல்முருகன், முருகவேல் ராஜன், திருப்பூர் அல்தாப், கே. பாலகிருஷ்ணன், கமல்ஹாசன், ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், தமீமுன் அன்சாரி, பி.என்.அம்மாவாசி என முக்கியத் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.