சென்னை: குட்கா கடத்தல் வழக்கில் தென்காசி மாவட்டம் சிவகிரி மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை தி.மு.க.வில் இருந்து நிரந்தர நீக்கம் செய்து கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளளார். ஏற்கனவே போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கும், கடத்தல் காரணமாக கைது செய்யப்பட்ட நிலையில், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் தமிழ்ச்செல்வி. இவர் திமுகவை சேர்ந்தவர். இவரது கணவர் போஸ் எனப்படும் சுபாஷ் சந்திரபோஸ். இவரும் திமுகவைச் சேர்ந்தவர். இவர், சட்ட விரோத போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. அதாவது, தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை, தடையை மீறி மொத்தமாக கொள்முதல் செய்து, திமுக நிர்வாகி என்ற அடையாளத்தைக்கொண்டு, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகித்து விற்பனை செய்து வந்தார். ஆளுங்கட்சி புள்ளி என்பதால். லோக்கல் காவல்துறையினர் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர். மேலும் வழக்குகளில் சிக்காமல் தப்பித்து வந்தார்.
ஆனால், இதுதொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில், சிறப்பு காவல்படை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, தென்காசி மாவட்ட எல்லையான சிவகிரியில் போதை பொருட்களை கடத்திச் செல்லும்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே இரவோடு இரவாக பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். லோக்கல் போலீசார், இந்த நடவடிக்கை தங்களதுக்கு தெரியாது என கூறி எந்தவொரு தகவலையும் வெளியிட மறுப்பதாக செய்தியாளர்கள் கூறி வருகின்றனர்.
தென்காசி மற்றும் நெல்லை, குற்றாலம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுவதாக, ஏராளமானபுகார்கள் வந்ததைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். அதன்படி, நேற்று அதிகாலையில் சிவகிரி சுற்று வட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகிரி அருகே ராயகிரி வடுகபட்டி வழியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 52), லாசர் (58) ஆகியோர் வந்த காரில் சோதனை செய்தனர். அதில் 450 கிலோ குட்கா இருந்தது. சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதை அறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் வந்த சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் லாசரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்தியச்சிறையில் அடைத்தனர். கைதான சுபாஷ் சந்திரபோஸ் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். அவருடைய மனைவி தமிழ்செல்வி தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இவர்கள் இருவரும் தி.மு.க. பிரமுகர்கள் ஆவர்.
சுபாஷ் சந்திரபோஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் அவரை கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு தி.மு.க.வினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார்.
திமுக அரசை விமர்சித்து பேசுவதற்கே குண்டர் சட்டம் போடும் திமுக அரசு போதைக் கடத்தல் சுபாஷ் சந்திரபோஸ் மீது குண்டர் சட்டம் போடுமா ? என சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.