சென்னை

மீண்டும் திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில பத்திரிகை தி ரைசிங் சன் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 1971 ஆம் ஆண்டு திமுகவின் கருத்துக்களைப் பிற மாநிலத்தவர்களுக்குத் தெரிவிக்கச் சென்னையில் தி ரைசிங் சன் என்னும் ஆங்கில பத்திரிகை தொடங்கப்பட்டது.  இதற்கு முரசொலி மாறன் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார்.  அந்த ஆங்கில பத்திரிகை கடந்த 1975 ஆம் வருடம் நிறுத்தப்பட்டது.

மீண்டும் கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவரான கருணாநிதி இந்த ஆங்கில பத்திரிகையைத் தொடங்கினார்.  பிறகு அது நிறுத்தப்பட்டது.  தற்போது மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் தேசிய அரசியலில் திமுக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே வெளி மாநிலத்தவருக்காக தி ரைசிங் சன் ஆங்கில பத்திரிகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் பதிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆசிரியராக கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.  இந்த இதழ் வெளியிட்டு விழாவில் துரைமுருகன், டி ஆர் பாலு, உதயநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இதன் முதல் பிரதியை இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.   அதை துரைமுருகன் பெற்றுக் கொண்டுள்ளார்.  தற்போது மாதமிரு முறை இதழாக தி ரைசிங் சன் வர உள்ளது.