டெல்லி: நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கொடூரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு 11ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில், மணிப்பூர் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய ஜூலை 20ந்தேதி முதல் இன்று வரை எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களாக மணிப்பூரில் நடைபெற்று வரும் இனக்கலவரம், அதைத் தொடர்ந்து வெளியான பெண்கள் நிர்வான ஊர்வலம் போன்ற சம்பவங்கள் நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முடககி வருகின்றன. மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக கடந்த 4நாட்களாக இரு அவைகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
மணிப்பூர் விவகாரம் குறித்து அவைகளில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில், திமுக சார்பிலும் இரு அவைகளிலும் ஒத்தி வைப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார் மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம். பி. மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.