சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பசுமை விமான நிலையத்திற்கு விரைவில் ‘தள’ அனுமதி வழங்குங்கள் என மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தி உள்ளார். திமுக எம்.பி எம்.பி.யின் கூற்றுப்படி, ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகளைக் கொண்ட பரந்தூர் விமான நிலையத்தின் முதல் கட்டம் ஜனவரி 2029 க்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை கருத்தில்கொண்டு சென்னையில் மேலும் ஒரு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் வசித்து வரும் 13 கிராமங்களை காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதுடன் நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னைக்கான பரந்தூர் புதிய ‘க்ரீன் ஃபீல்டு’ விமான நிலையம் அமைக்கத் தோ்வு செய்யப்பட்டுள்ள பரந்தூா் ‘தள’த்திற்கு துரிதமாக அனுமதி வழங்க வேண்டும் என மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்து திமுக எம்.பி. வில்சன் கடிதம் கொடுத்துள்ளார். அதில், சென்னைக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 4,970 ஏக்கரில் புதிய ‘க்ரீன் ஃபீல்டு’ விமானநிலையம் அமைக்க முன்மொழியப்பட்டது. தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் கட்டப்படும் இந்த விமான நிலையத்திற்கான ‘தள’ அனுமதி வழங்க அனுமதி கோரி கடந்த 19.08.2022-இல் விண்ணப்பிக்கப்பட்டது. இது கிரீன் ஃபீல்ட் விமானநிலையக் கொள்கையின் கீழ் அமைக்கப்பட்ட ‘வழிகாட்டல் குழு’ முன் இந்தத் திட்டத்திற்கான ‘தள’ அனுமதி நிலுவையில் உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தின் ‘தள’ அனுமதிக்கு 500 நாள்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால், திட்டத்தின் முன்னேற்றம் தடைபடுகிறது. பரந்தூா் விமான நிலையம், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கான அனைத்து வழிகாட்டுதல்களும் இணக்கமாக உள்ளது. இதற்கான விளக்கங்களும், ஆய்வுகளும் ஏற்கெனவே சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டு முதல்கட்டமாக ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் உருவாக்கப்ப டுகிறது. இந்த விமானநிலையம் 2029-ஆம் ஆண்டு ஜனவரிக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ‘தள’ அனுமதி துரிதமாக வழங்கப்பட்டால், இது ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.
அவரது கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சா், இந்தக் கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளதாக செய்தியாளா்களிடம் பின்னா் வில்சன் கூறினாா்.