சென்னை

சென்னை – மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆறு மணி நேரம் பயணம் செய்கிறது.  இந்த ரெயில் திருச்சி மற்றும் கொடைக்கானல் ரோடு ஆகிய இரு இடங்களில் மட்டுமே நின்று செல்கிறது.   குறைந்த நேர பயணம் மற்றும் விமானத்துக்கு சமமான வேகம் ஆகியவற்றுக்காக இந்த ரெயில் அதிக இடங்களில் நிற்பதில்லை.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி ஆர் பாலு வெற்றி பெற்றுள்ளார்.  தற்போது  திமுக மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.  டி ஆர் பாலு சென்னை – மதுரை இடையில் செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தனது தொகுதிக்குட்பட்ட தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கு நின்று செல்வதன் மூலம் பல பயணிகளுக்கு வசதியாகவும் நேரம் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.    சென்னையின் மூன்றாவது முனையமாக தற்போது தாம்பரம் ரெயில் நிலையம் உள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர், “இதை போலவே விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் ரெயில் நிலையங்களிலும் இந்த ரெயில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கைகள் உள்ளன.    இந்த ஒரு இடத்தில் நின்று சென்றால் மற்ற இடங்களிலும் நின்று செல்ல நேரிடும்.

இதனால் பயணநேரம் மேலும் 15-20 நிமிடங்கள் அதிகரிக்கும்.  விரைவாக செல்ல விரும்பும் பயணிகளுக்கு இது பிடிக்காத ஒன்றாகும்.   பயணிகள் தற்போதுள்ள பயண நேரத்தில் அதிகமாக உள்ளதாகவும் எனவே 15-20 நிமிடங்கள் பயண நேரத்தை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.