டில்லி,
டில்லியில் 17 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுடன் திமுகவை சேர்ந்த எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
தலைநகர் டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் அரை நிர்வாணமாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் இன்று 18வது நாளை எட்டியுள்ளது.
தங்களது மீதான விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கூடுத லாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, ராஜ்நாத்சிங் மற்றும் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து முறையிட்டும், எந்தவித உறுதியும் கிடைக்காத நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போராடி வரும் தமிழக விவசாயிகள் எலிக்கறி, பாம்புக் கறி, வாயில் கறுப்பு துணி கட்டுதல், தூக்கு கயிறு மாட்டுதல் போன்ற பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு திமுக எம்.பி. கனிமொழி நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.